18

siruppiddy

ஜூலை 21, 2015

உச்ச நீதிமன்றத்தில் ராஜீவ் கொலையாளிகள் விடுதலை விவகாரம் ???

.தமிழக சிறையில் அடைக்கப்பட்டுள்ள ராஜீவ் கொலையாளிகளை விடுதலை செய்ய மத்திய அரசுடன் ஆலோசனை நடத்தினால் போதும், அனுமதி பெறத் தேவையில்லை’ என்று உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு பதில் மனு தாக்கல் செய்துள்ளது.
ராஜீவ் கொலையாளிகள் முருகன், சாந்தன், பேரறிவாளன், நளினி, ராபர்ட் பயஸ், ஜெயகுமார், ரவிக்குமார் ஆகிய ஏழு பேரும் தங்களை விடுதலை செய்ய மத்திய, மாநில அரசுளுக்கு உத்தரவிடக் கோரி உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர்.
இந்த மனுக்கள் மீது கடந்த 15ம் தேதி நடந்த விசாரணையின் போது ராஜீவ் கொலையாளிகளை விடுதலை செய்ய மாநில அரசுக்கு அதிகாரம் உண்டு என்று தமிழக அரசு ஏற்கெனவே முன்வைத்த வாதத்தை மனுதாரர்கள் தரப்பில் ஆதரித்து மூத்த வழக்குரைஞர் ராம் ஜெத்மலானி வாதிட்டார்.
மத்திய அரசு எதிர்ப்பு: இதற்கு மத்திய அரசு வழக்குரைஞர் ஆட்சேபம் தெரிவித்ததால், இந்த மனுக்கள் மீதான மத்திய, மாநில அரசுகளின் வாதத்தை ஜூலை 21, 22, 23 ஆகிய நாள்களில் முன்வைக்க உச்ச நீதிமன்ற அரசியல் சாசன அமர்வு அனுமதி அளித்தது.
இந்நிலையில் இந்த விவகாரத்தில் தனது தரப்பு நிலைப்பாட்டைத் தெளிவுபடுத்தும் வகையில் தமிழக அரசு சார்பில் நேற்று திங்கட்கிழமை மனு தாக்கல் செய்யப்பட்டது. அதன் விவரம் வருமாறு:
குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் இரண்டு முக்கிய பிரிவுகளை நீதிமன்றம் கவனத்தில் கொள்ள வேண்டும். இச்சட்டத்தின் விதி 432(2) பிரிவின்படி குற்றவாளியின் தண்டனை குறைப்பு
 தொடர்பாக நீதிமன்றத்தின் கருத்து அறியப்பட வேண்டும். விதி 435(1) பிரிவின்படி மத்திய அரசு தொடர்புடைய வழக்குகளில் அதன் கருத்து அறியப்பட வேண்டும். இதில் “விதி 433′ தண்டனை குறைப்பையும், “விதி 432′ தண்டனைக் குறைப்புடன் சம்பந்தப்பட்ட கைதியை விடுவிக்கவும் வகை செய்கிறது.
சட்டப்பிரிவு கூறுவது என்ன?: “432(2) பிரிவு’ தண்டனைக் குறைப்பு வழக்குகளுக்கு மட்டுமின்றி, சம்பந்தப்பட்ட கைதியை விடுவிக்கவும், அவருக்கு வழங்கப்பட்ட தண்டனையை ரத்து செய்யவும் வகை செய்கிறது. தண்டனை அனுபவித்து வரும் கைதி, 432(2) பிரிவின்படி தனக்கு வழங்கப்பட்ட தண்டனையைக் குறைக்கக் கோரி மனு தாக்கல் செய்ய உரிமை வழங்குகிறது.
அதே சமயம், 432(1) விதி, அந்த கைதியை விடுதலை செய்ய 
சம்பந்தப்பட்ட அரசு தன்னிச்சையாக முடிவெடுக்க அதிகாரம் அளித்துள்ளது. மேலும், தண்டனைக் காலம் குறைக்கப்பட்டு சிறையில் இருக்கும் கைதியை விடுதலை செய்ய முடிவெடுக்கும் அதிகாரத்தை நிர்வாகத்துக்குத்தான் அரசியலமைப்பு விதி 72/61-இன் கீழ் வழங்கியுள்ளது.
எனவே, இந்த அதிகாரத்தை பயன்படுத்தும் போது நீதிமன்றத்தின் கருத்தை அறிய வேண்டிய அவசியம் சம்பந்தப்பட்ட அரசுக்குக் கிடையாது.
அதிகாரத்தை பறிக்கக் கூடாது: ராஜீவ் கொலையாளிகள் விவகாரத்தில் சிபிஐ விசாரித்த வழக்கில் தண்டனை அனுபவித்த கைதிகளை 
விடுதலை செய்யும் நடவடிக்கை பற்றி மத்திய அரசுக்கு தமிழக அரசு முறைப்படி கடிதம் எழுதியது.
கூட்டாட்சி முறையில் இந்த நடவடிக்கை, மத்திய அரசுடன் மாநில அரசு நடத்திய ஆலோசனையே தவிர அது அனுமதி பெறுவதற்கான முயற்சியாகக் கருதக் கூடாது. அரசியலமைப்பு விதி 435(1) இதை மிகவும் தெளிவாகக் கூறியுள்ளது. இந்த அதிகாரத்தை மத்திய அரசு பறிக்கும் நோக்கில் பொருள் கொள்வது தவறானது.
மத்திய அரசு தொடர்ந்த இரண்டுக்கும் அதிகமான வழக்குகளில் தண்டனை பெற்ற கைதியை விடுதலை செய்யும் நடவடிக்கையில் மத்திய அரசின் அனுமதியைப் பெற வேண்டும் என்று அரசியலமைப்பு விதி 435(2) மூலம் பொருள் கொள்ளலாம்.
இந்த இரு விதிகளையும் மத்திய அரசு தனக்கு சாதகமாக பொருள் கொள்ளக் கூடாது’ என்று தமிழக அரசு மனுவில் குறிப்பிட்டுள்ளது.
உச்ச நீதிமன்ற அரசியல் சாசன அமர்வு முன்பு ராஜீவ் கொலையாளிகள் தாக்கல் செய்த மனுக்கள் மீது இன்று செவ்வாய்க்கிழமை விசாரணை நடைபெறவுள்ளது. அப்போது மேற்கண்ட தமிழக அரசின் மனுவும் விசாரணையின் போது கவனத்தில் கொள்ளப்படும் எனத் தெரிகிறது.
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

0 கருத்துகள்:

கருத்துரையிடுக