18

siruppiddy

ஜூலை 31, 2015

இலங்கையில் மீண்டும் இந்திய அமெரிக்க ஆதிக்கப்போட்டியா?

உலக நாடுகளில் சுயநலமிக்க நாடுகளில் முதன்மை நாடு அமெரிக்கா. அடுத்து முதன்மை பெறுவது இந்தியா என்பது நம்பில் பலருக்கும் நன்கு தெரியும். இந்திய தேசம் அண்டை தேசம் என்பதுடன், இலங்கை தேசத்தின் தாய்த் தேசம் என்று சொன்னால் மிகைப்படுத்தலன்று.
இலங்கைக்கும் இந்தியாவிற்கும் பூர்வீக பந்தங்கள் நிறையவே உண்டு, மொழி, பண்பாடு, கலாச்சாரம், மதங்கள் என்று எடுத்து நோக்கின் அத்துணையும் இரு நாட்டையும் இணைக்கும் பாலங்கள் எனலாம். 
இந்தியாவில் ஏற்படுகின்ற அத்துணை மாற்றங்களும் இலங்கையிலும் காலாகாலமாக ஏற்படுவது வழமை.
பாக்கு நீரினை ஒன்றே இரு நாட்டையும் பிரித்து நிற்கின்றது. தவிர, வேறேதும் இங்கு தடையல்ல.
அதனாலேயே இந்தியாவில் உள்ள தமிழ் உறவுகளை நாம் இன்று வரை தொப்புல் கொடு உறவுகள் என்றழைக்கின்றோம்.
ஆக தாய் தேசம் என்று இன்று நாம் சொல்லும் இந்தியா அதாவது இந்திய மத்திய தேசம் இலங்கை விடையத்தில் அன்றிலிருந்து இன்றுவரை தனது சுயநல அரசியலையே நடத்திவருகின்றது.

இலங்கை இந்தியாவின் தெற்குக்கரையில் தமிழ்நாட்டுக்கு கீழ் அமைந்துள்ளமையினால் இந்தியாவின் பாதுகாப்பிற்கு அது மிகவும் பயனுள்ளதாகவே அமைந்துள்ளது. ஐரோப்பியர்கள் முதலில் இந்தியாவை கைப்பற்றியிருந்தாலும், அவர்கள் இலங்கையையும் கைப்பற்றி தமது ஆளுகைக்குள்ளேயே வைத்திருந்தார்கள்.

இந்தியாவை கண்காணிப்பதற்கு ஏற்ற வழமான இடம் இதுவென்பது ஐரோப்பியர்களுக்கு நன்கு தெரியும். அதன் பிரதிபலிப்பே இலங்கை மீதான தாக்கம்.

இந்திய நாடு தனது வெளிநாட்டுக்கொள்கைகளில் இலங்கை மீதான அதனது கொள்கை என்பது மிகவும் தவறான ஒரு கண்ணோட்டத்தில் அமைந்திருப்பதை அண்மைக்காலமான செயற்பாடுகள் மூலமாக உணர முடிகின்றது.
எழுபதாம் ஆண்டு காலப்பகுதியில் தமிழீழ விடுதலைப்புலிகளின் எழுச்சியின் போது இலங்கையில் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் ஆதிக்கம் ஆசியாவின் மிகச்சிறிய நாடான இலங்கை மீதுபரவத்தொடங்கியிருந்தது.
அதிலும் இலங்கையின் புத்தளத்தில் “வாய்ஸ் ஆவ் அமெரிக்கா” என்கின்ற தொலைத் தொடர்பு கோபுரம் அமைத்து தெற்காசியாவை அமெரிக்கா தனது கண்காணிப்பில் வைத்திருந்தமையானது இந்தியாவிற்கு மிகப்பெரியதொரு சவாலாகவே இருந்தது.
இந்த நெருக்கடி நிலையினை 1950 ஆண்டு காலப்பகுதியோடு வரலாற்று ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டுவார்கள். 1950களில் பிரித்தானியர்களது திருகோணமலை கடற்படைத்தளம் இந்தியாவின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக மட்டுமன்றி இலங்கைக்கும் அது மிகப்பெரிய சவாலாக தான் இருந்தது.
எனினும் அது 1950களின் இறுதிப்பகுதியில் வாபஸ் பெறப்பட்டு விட்டது.
இந்நிலையில் எழுபதுகளில் விடுதலைப்போராட்ட இயக்கங்கள் எழுச்சி பெறவும், புலிகளின் வளர்ச்சியும் அமெரிக்காவிற்கு தலையிடியாகவே அது மெல்ல மாறத்தொடங்கியது.
மறுபுறத்தில் தனது தேசிய பாதுகாப்பிற்கு இலங்கை மீது அமெரிக்காவின் நகர்வை பிடுங்க இந்திய அரசாங்கம் திட்டம் வகுத்துக்கொண்டது. தமிழ்ப் போராளிக்குழுக்களை அழைத்து இந்தியாவில்
 பயிற்சி வழங்குவதற்கு இந்திராகாந்தி அம்மையார் இணக்கம் தெரிவித்ததோடு அதற்கு ஏற்றால் போல போராட்டாக் குழுக்களுக்கும் பயிற்சி வழங்கப்பட்டன.
ஆனால் தவிர்க்க முடியாதவொரு சவாலை இந்திய மத்திய அரசாங்கம் எதிர்கொண்டது. தமது சுயநலத்திற்காக போராளிக்குழுக்களை ஆதரித்த இந்தியாவிற்கு புலிகளும், பிரபாகரனும் தலையிடியாக
 மாறியதே அது.
இலங்கையில் தோன்றிய 32இற்கும் அதிகமான போராட்ட குழுக்களில் புலிகள் மட்டும் இந்தியாவின் சொற்களுக்குள் கட்டுப்பட மறுத்தனர். புலிகள் தனி ஈழத்தில் அக்கறையாக இருந்ததோடு, அதில் உறுதியாகவும் இருந்தனர்.
இதன் அடுத்த நகர்வாகவே புலிகளை தேடியழிக்கும் நகர்வை இந்தியா கையிலெடுத்தது. போராளிக்குழுக்களுக்கிடையில் பிரச்சினையை மூட்டிவிட்டு அதனூடாக பிரபாகரனையும், விடுதலைப் புலிகளையும்
 அன்றே அழிக்க முயன்றனர். ஆனால் இது பிரபாகரனை ஏனோ அசுரவளர்ச்சியடைய வைத்ததை இந்தியா சற்றும் அன்று எதிர்பார்த்திருக்கவில்லை.
எனினும் இந்தியாவின் இந்நகர்வுகள் தவுடுபொடியாக இந்திரா காந்திக்குப் பின்னர் ராஜீவ்காந்தி அரசியல் களத்திற்கு புகுந்து அவரும் இலங்கை மீதான இந்தியாவின் வெளிநாட்டுக்கொள்கையை தவறாகவே பின்பற்றியிருந்தார்.
முதலில் புலிகளுக்கு சார்பாகவும், இலங்கை தமிழ் இனத்திற்கு காவலனாகவும் செயற்படுவதாக காட்டிக்கொண்டவர் பின்னர் இலங்கை அரசாங்கத்தோடு ஒப்பந்தம் செய்தார். அமைதிப்படையை அனுப்பினார்.
ஆனால் அந்த 13வது திருத்த ஒப்பந்தத்தை கிடப்பில் போடவேண்டிய தேவை ஜே.ஆர்க்கு ஏற்படவும், இந்திய இராணுவத்தை வெளியேற்றவும் காரணம் தேவைப்பட, தமிழர்களை காக்க வந்ததாக சொல்லப்பட்ட இந்திய அமைதிப்படையை அவர் தமிழர்களுக்கு எதிராக திருப்பி விட்டார்.
சிங்கள இராணுவத்திடம் வேண்டிக்கொண்டது போதாது என்று அண்டை நாட்டு இராணுவத்திடமும் ஈழத்தமிழினம் நொந்து கெட்டுப்போனது.
கடைசியாக ராஜீவ்காந்தியின் இந்தியப்படை பிரபாகரனிடமும், புலிகளிடமும் வாங்கிக்கட்டிக்கொண்டு திரும்ப, ஜே.ஆரின் இலக்கும் வெற்றி பெற்றது. அதிலும் இந்தியா தோற்றுப்போயிற்று.
தனது தேசிய பாதுகாப்பு என்பது தான் குறிக்கோள் என்பதில் குறியாக இருந்த இந்தியா புலிகளை அழித்தாக வேண்டுமென்பதில் கங்ஙணம் கட்டிக்கொண்டு நின்றது. அதற்கான வேலைகள் சரியாக நடக்க நோர்வே தலைமையிலான சமாதான ஒப்பந்தம் கொண்டு வரப்பட்ட சமநேரத்தில் இலங்கை இராணுவத்தின் படைப்பலமும் சகல வழிகளிலும் பெருக்கப்பட்டது.
ஆனால் இந்தியாவில் ஆட்சி மாற்றம் பெற்றதும் சோனியா காந்தி பிரபாகரனை அழிக்கும் செயற்றிட்டத்தில் தீவிரமாகவே இருந்தார். அது மகிந்தவிற்கு வாய்ப்பாகவும் இருந்தது.
புலிகளை அழித்தால், அவர்களை அழிக்க சகல வழிகளிலும் மகிந்த தரப்பிற்கு உதவினால் தம் சொல்லை இலங்கை தட்டாது என்பதே சோனியா, மன்மோகன் அரசின் திடமான நம்பிக்கை. ஆனால் சற்றும் எதிர்பாராத விதமாக மகிந்தர் சீனாவின் பக்கம் சாய்ந்தார்.
இது இந்தியாவிற்கு மட்டுமல்ல, அமெரிக்க ஏகாதிபத்தியத்திற்கும் மிகப்பெரிய தலையிடியாக மாறிப்போயிருந்தது. ஏற்கனவே பாகிஸ்தானை தனது கைக்குள் கொண்டுள்ள சீனா, இப்பொழுது இலங்கையையும், தனது கட்டப்பாட்டிற்குள் கொண்டுவந்தால் வல்லரசான அமெரிக்காவிற்கும், வல்லரசு கனவோடு நடைபோடும் இந்தியாவிற்கும் மிகப்பெரிய அச்சுறுத்தல் காத்திருந்தது.
மகிந்தவோடு நிகழ்ந்த பல சுற்றுப்பேச்சுக்கள் சாதகமாக காணப்பட்டாலும், அவர் பேசுவது ஒன்றும் செயற்பாடு இன்னொன்றுமாக இருக்க, இந்தியாவும், அமெரிக்காவும் கரம் கோர்த்தது. அதன் தாக்கமே யுத்த நாயகனின் வீழ்ச்சி.
இந்நிலையில் புலிகளை அழித்து வெற்றி கொண்டதாக இந்தியா பெருமிதம் கொண்டாலும் அது தனது தலையில் தானே மண்ணை அள்ளிப்போட்டது என்பதை உணர்ந்தது.
இப்பொழுது சீனாவை அகற்ற அமெரிக்காவோடு கரம் கோர்த்து வீழ்த்தியாயிற்று. ஆனால் சீனாவின் இடத்தில் இப்பொழுது அமெரிக்கா!
1970 ஆண்டு காலப்பகுதியை மீண்டும் உணரமுடிகின்றது. ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னரே ரணில் அமெரிக்காவில் தங்கியிருந்து ஒரு மாதகால அரசியல் பயிற்சியை முடித்துவிட்டு வந்திருக்கின்றார். பின்னர், ஆட்சி மாற்றம், இப்பொழுது இந்தியாவிற்கு கலக்கம்.
ஆனால் திரும்பவும் தனது வரலாற்று தவறை இந்தியா கையிலெடுத்திருக்கின்றது போல உணரமுடிகின்றது. அண்மைய நாட்களாக மகிந்தவின் வெற்றிக்கு இந்தியாவின் புலனாய்வுப்பிரிவான றோ வேலை செய்வதாகவே செய்திகள் உலாவருகின்றன.
அதை மெய்ப்பிக்கும் வகையில், தமிழகத்தின் பல இடங்களிலும், புலிகளின் முக்கிய போராளிகள் சைனட் குப்பிகளோடு கைது செய்யப்பட்டதாக அறிவித்ததோடு, பிரபாகரனோடு இருந்த முக்கிய நபரும் கைது செய்யப்பட்டார் என்றும் இந்திய பாதுகாப்புத் துறை சொல்லியிருக்கின்றது.
வடக்கில் மக்கள் புலிகளை தேடுகின்றார்கள் என்று கூறிப்பிரச்சாரம் செய்த மகிந்தவிற்கு இதுவொரு மிகப்பெரிய வாய்ப்பாக இருக்கவே செய்கின்றன.
இந்நிலையில் இவ்வாரம் வெளிவந்த மகிந்த ராஜபக்ச அணியினரின் தேர்தல் விஞ்ஞாபனமும் ஒரு உண்மையை சுட்டி நிற்கின்றது. அதாவது ஆசிய நாடுகளுக்கே இலங்கையில் முன்னிரிமையென்று. 
அதாவது அமெரிக்கா மேற்குலம் பற்றி அவர் வாய் திறக்கவில்லை.
எனில் அவர் இந்தியாவிற்கே தனது ஆதரவு என்று சொல்லாமல் சொல்லியிருக்கின்றார். அப்படியென்றால் இந்தியா மீண்டும் மகிந்தரை கொண்டுவர முழுமூச்சோடு செயற்படுகின்றதா?
அப்படியெனில் அது மீண்டுமொருமுறை வரலாற்று தவறை செய்யவே ஆரம்பித்திருக்கின்றது. தனது பிராந்திய பாதுகாப்பிற்காக அது தவறுமேல் தவறு செய்கின்றது. இல்லாத புலிகளை உருவாக்கவும் முயற்சிக்கின்றது.
அமெரிக்க இந்திய ஆதிக்கப்போட்டி இலங்கையில் மீண்டும் உச்சம் பெற்றுள்ளமையானது தமிழ் மக்களின் அரசியல் எதிர்காலத்திற்கு மிகப்பெரிய கேடாகவே கருதவேண்டியிருக்கின்றது.
இதை தமிழர் அறிவுஜீவிகள், சிவில் சமூகத்தினர், புலம்பெயர் தமிழர்கள், மற்றும் அரசியல் தலைமைகள் எவ்விதம் கையாளப்போகின்றார்கள் என்பதை பொருத்திருந்து தான் பார்க்க வேண்டும். பொதுத் தேர்தல் அதற்கான பல விடைகளை, கதவுகளை திறந்து விடும்.
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

0 கருத்துகள்:

கருத்துரையிடுக