18

siruppiddy

செப்டம்பர் 17, 2013

காடையர்கள் தாக்குதலுக்கு இலக்கான குடும்பஸ்தர் உயிரிழப்பு!


முல்லைத்தீவு வள்ளிபுனத்தில் இளம் குடும்பஸ்தரை அடித்துக் கொலை செய்தவர்கள் அவரது உறவினர் முறையான சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் காடையர்கள் என்று சங்கதி24 செய்திப் பிரிவின் முல்லைத்தீவு செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

வெலி ஓயா பிரதேசசத்தில் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பில் போட்டியிடும் வேட்பாளரான ராஜகருணா என்பவருக்கு பிரசாரத்தில் ஈடுபட்ட மு.தயாபரன், த.சிவராசா ஆகிய இரண்டு காடையர்களுமே இராசையா சுரேஸ் அல்லது கபிலன் என்ற 35 வயதான இளைஞனை அடித்துக் கொலை செய்துள்ளனர்.

இறந்தவர் ஒரு குடும்பஸ்தர். இவருக்கு மூன்று பிள்ளைகள் உள்ளனர். மர வியாபாரத்தில் ஈடுபட்டு வருபவர். நேற்று இரவு ஏழு மணியளவில் சுரேஸ் வள்ளிபுனத்திலுள்ள ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி அலுவலகத்திற்கு முன்னால் வைத்து அடித்துக் கொலை செய்யப்பட்டிருக்கின்றார்.

மேற்படி இரு காடையர்களில் தயாபரன் என்பவர் வவுனியாவில் வசிப்பவர் என்றும் முல்லைத்தீவிற்கு வந்து சிறிலங்கா படையினரின் உதவியுடன் மரம் மற்றும் இரும்பு என்பவற்றைக் கடத்திச் சென்று வியாபாரத்தில் ஈடுபடுபவர்.
இவர் சுரேஸின் தங்கையைத் திருமணம் செய்துகொண்டவர். ஆனால்,

இருவருக்கும் இடையில் கட்சி ரீதியாக வேறுபாடுகள் இருந்திருக்கின்றன. ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பை ஆதரிக்க வேண்டும் என்று மேற்படி தயாபரன் வற்புறுத்தி வந்த நிலையிலேயே சுரேஸ் அதற்கு மறுத்ததால் அவரைத தீர்த்துக் கட்டியிருக்கின்றார்.

மேற்படி இருவரும் கடந்த பல மாத காலமாக முல்லைத்தீவு மாவட்டத்தில் ரவுடித்தனத்தில் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த ஒரு மாதத்திற்கு முன்னர் சிவராசா என்பவர் வள்ளிபுனத்தில் ஒரு இளைஞரைக் கடுமையாகத் தாக்கி மண்டை உடைத்திருந்தார்.

அவர் துடித்துக்கொண்டிருந்தபோது அந்த இடத்தை விட்டுத் தப்பிச் சென்றார். ஆனால் அவரின் உறவினர்கள் இது தொடர்பாக காவல்துறையிடம் முறையிட்டும் அவர்கள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. அந்தளவிற்கு அவர்களுக்கு காவல்துறையினர் உடந்தையாக உள்ளனர்.

காவல்துறையினரின் அனுசரணையுடனும் படையினரின் ஆசியுடனுமே இவர்கள் முல்லைத்தீவில் தமது அராஜகங்களை முன்னெடுத்துச் செல்கின்றனர். இந்தச் செயற்பாட்டைத் தடுத்து நிறுத்துவதற்கு சிறிலங்கா காவல்துறை நடவடிக்கை எடுக்காவிட்டால் விரைவில் இவர்களின்

அடாவடிக்கு தாங்கள் முடிவுகட்டவேண்டி வரும் என்று முல்லைத்தீவு மக்கள் எச்சரித்துள்ளதாகவும் சங்கதி24 இன் முல்லைத்தீவுச் செய்தியாளர் தெரிவித்துள்ளார்

0 கருத்துகள்:

கருத்துரையிடுக