கனடாவில் அமைந்துள்ள முன்னணி இந்துக்கோயிலான கந்தசாமி கோயில், விடுதலைப்புலிகளுக்காக நிதி சேகரித்ததாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.கனடாவின் நெசனல் போஸ்ட் தகவலின்படி கனேடிய எல்லைப் பாதுகாப்பு சேவை நிறுவனம் இது தொடர்பில் பிராந்திய நீதிமன்றம் ஒன்றில் அறிக்கையை அளித்துள்ளது.
கிழக்கு எல்லை டொரன்டோவில் அமைந்துள்ள இந்த கோயில், கனடாவில் பயங்கரவாத தடைப்பட்டியலில் உள்ளடக்கப்பட்டுள்ள விடுதலைப் புலிகளின் ஆதரவு அமைப்பு என்று கூறப்படும் உலக தமிழர் இயக்கத்தின் கட்டுப்பாட்டில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கையின் அகதியான கோயிலின் குரு ஒருவர் விடுதலைப்புலிகளின் உறுப்பினர் என்று தேசிய பாதுகாப்பு சோதனை பிரிவினர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த வழக்கு ஒன்றின் விசாரணை இரண்டு வாரங்களுக்கு முன்னர் முடிவடைந்தபோதே இந்த கோயில் விடயமும் வெளியானது.
குறித்த குரு, கனடாவில் தடை செய்யப்பட்ட விடுதலைப்புலிகள் இயக்க ஆதரவு அமைப்பான உலக தமிழர் இயக்கத்தின் கட்டுப்பாட்டில் இருக்கும் கோயில் பணியாற்றுவதாக இதன்போது தேசிய பாதுகாப்பு பிரிவினர் மன்றில் அறிவித்தனர்.
இதேவேளை தேசிய பாதுகாப்பு பிரிவினரின் இந்த கூற்றை மறுத்துள்ள ஸ்காப்ரோ கோயில்களின் பணிப்பாளர் தனபாலசிங்கம் கனகசபாபதி, கந்தசுவாமி கோயில் விடுதலைப்புலிகளின் கோயில் இல்லை என்று குறிப்பிட்டுள்ளார். இந்தக்கோயிலுக்கு எவரும் வந்து பிரார்த்தனைகளில் ஈடுபடலாம். இது அரசியலுக்காக ஒதுக்கப்பட்டுள்ள இடம் அல்ல என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
சில வேளைகளில் கனடாவில் தடை செய்யப்பட்டுள்ள உலக தமிழர் இயக்கத்தின் உறுப்பினர்களும் இங்கு வந்து வழிபாடுகளில் ஈடுபடலாம் என்று சுட்டிக்காட்டியுள்ளார்.இதன்போது அவர்களை அங்கு வரவேண்டாம் என்று கூறமுடியாது என்றும் தனபாலசிங்கம் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை இந்த கோயிலின் நிர்வாகத்தை கைப்பற்றுவதற்காக மாற்றுத் தரப்பினர் மேற்கொள்ளும் பிரசாரமாகவும் இது இருக்கலாம் என்று சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.அத்துடன் இந்த ஆலயத்திற்கு பல அரசியல் தலைவர்கள் வழிபாடுகளில் ஈடுபட்டு செல்கின்றமை குறிப்பிடத்தக்க ஒன்றாகும்,
0 கருத்துகள்:
கருத்துரையிடுக