18

siruppiddy

ஆகஸ்ட் 16, 2013

பெருகி வரும் நிர்வாண திருமணம்: சமுதாய மாற்றத்தை ஏற்படுத்தும்


 
சீனாவில், "நிர்வாண திருமணம்' எனப்படும், புதிய வகை திருமண முறை, வேகமாக பரவி வருகிறது. இளைஞர்கள் பலரும், இவ்வகை திருமணத்தை பெரிதும் விரும்புவதால், அந்நாட்டில் இந்த திருமண முறைக்கு, பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது.
 சீனாவில், கடந்த, 13ம் தேதி, காதலர் தினம் கொண்டாடப்பட்டது. உலகின் பல நாடுகளிலும் பிப்., 14ம் தேதி காதலர் தினமாகக் கொண்டாடப்பட்டாலும், சீனாவில் சற்று வித்தியாசமாக, அந்நாட்டு பாரம்பரியத்தின் படி, காதலர் தினம் கொண்டாடப்படுகிறது. இந்நாளில், நாட்டில் பல பகுதிகளைச் சேர்ந்த காதலர்களும், ஷாப்பிங் மால்கள், திரையரங்குகள், ஓட்டல்கள் மற்றும் பூங்காக்களுக்கு சென்று, காதலர் தினத்தை சிறப்பாகக் கொண்டாடினர். அப்போது அந்நாட்டின், "டிவி' நிறுவனம் ஓர் ஆய்வு நடத்தியது. சீன இளைஞர்கள் எவ்வகை திருமணம் செய்ய விரும்புகின்றனர் என்ற வகையில், அந்த ஆய்வு அமைந்திருந்தது. சீனர்களின் பாரம்பரிய முறைப்படி திருமணம் செய்யும் போது, மணமகள் வீட்டார், மணமகன் வீட்டாருக்கு, ஏராளமான வரதட்சணை கொடுக்க வேண்டும். பல ஆண்டுகளுக்கு முன், பெருமளவு தானியங்களும், ஆடை ஆபரணங்களாகவே தரப்பட்ட இந்த வரதட்சணை, நாளடைவில் நாகரீக மாற்றத்திற்கேற்ப, கார், வீடு என உருமாறியது. இதனால், பாரம்பரிய முறைப்படி திருமணம் செய்வதில், ஏராளமான பொருட்செலவு ஏற்படுகிறது. இக்கால இளைஞர்கள் பலரும் இதை விரும்புவதில்லை. இதனால், இளைஞர்களில் சிலர், சில ஆண்டுகளுக்கு முன், வரதட்சணை பெறாமல், மிக எளிய முறையில் திருமணம் செய்து கொண்டனர். இதற்கு பல தரப்பிலிருந்தும் ஆதரவும் எதிர்ப்பும் கிளம்பியது. எனினும், அதிகப்படியான இளைஞர்கள் இந்த புதிய முறை திருமணங்களால் பெரிதும் கவரப்பட்டு, எளிய வகை திருமணங்களை செய்து கொண்டனர். பாரம்பரியத்தில் மூழ்கிய பலரும், இவ்வகை திருமணங்கள், "நிர்வாணத் திருமணங்களே' என, கேலி செய்தனர். முறையான சடங்குகள் பின்பற்றாமல் செய்யப்படுவதால், "ஆடையில்லாத மனிதனுக்கு ஒப்பானது' என, கூச்சலிட்டனர். பழமைவாதிகளின் எதிர்ப்புக் குரலையும், தங்களுக்கு உந்து சக்தியாக எடுத்துக் கொண்ட இளைஞர்கள், இவ்வகை திருமணத்திற்கு, "நிர்வாணத் திருமணம்' என்றே பெயர் சூட்டினர்.
 கடந்த சில ஆண்டுகளாக, சீன இளைஞர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ள இவ்வகை திருமணங்கள், நாடு முழுவதும் வேகமாக பரவத் துவங்கியுள்ளன. "டிவி' நிறுவனம் நடத்திய ஆய்வில் பங்கேற்ற, 80 சதவீதத்திற்கும் மேற்பட்ட இளைஞர்கள், நிர்வாணத் திருமணத்தை ஆதரித்தனர். இவ்வகை திருமணம் செய்வதால், தேவையற்ற பொருட் செலவு குறைக்கப்படுவதாகவும், பெற்றோரின் மன உளைச்சலை குறைக்க முடிவதாகவும் கருத்து தெரிவித்துள்ளனர். "ஆடம்பர திருமணத்திற்காக செலவிடப்படும் தொகையை சேமித்து, திட்டமிட்ட வாழ்க்கை வாழலாம்' என, கூறியுள்ளனர். அக்காலத்தில் இளைஞர்களின் வாழ்வாதாரத்திற்காகவே, வரதட்சணைகள் கொடுக்கப்பட்டதாகவும், இக்காலப் பெண்கள் அதிகம் படித்துள்ள நிலையில், கணவன், மனைவி இருவருமே வேலைக்கு சென்று சம்பாதிப்பதால், வரதட்சணை, பெற்றோர் மீது சுமத்துப்படும் தேவையற்ற சுமை என்றும் கருத்து தெரிவித்துள்ளனர். ""புதிய முன்னேற்றத்திற்கு வழிவகுக்கும், ஆடம்பரமற்ற திருமணங்களை பழமைவாதிகள், நிர்வாணத் திருமணம் என கேலி செய்தனர். நாங்கள் அதையே எங்களுக்கு சாதகமாக்கிக் கொண்டு, எங்களின் புதிய முயற்சிக்கு "நிர்வாணத் திருமணம்' என்றே பெயர் சூட்டியுள்ளோம்'' என, சீன இளைஞர்கள் உற்சாகத்துடன் தெரிவித்தனர்
 

0 கருத்துகள்:

கருத்துரையிடுக