18

siruppiddy

ஆகஸ்ட் 23, 2013

தமிழீழத்தில் போர் எச்சங்களை அழிக்கும் முயற்சியில்


இறுதிக்கட்டப் போர் இடம்பெற்ற முள்ளிவாய்க்கால் பகுதியில் போர் எச்சங்களை அழிக்கும் நடவடிக்கையில் சிறிலங்கா இராணுவத்தினர் தீவிரமாக ஈடுபட்டு வருவதாக வன்னித் தகவல்கள் தெரிவிக்கின்றன.
 சிறிலங்கா செல்லும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவை ஆணையாளர் நவனீதம்பிள்ளை, போர் இடம்பெற்ற பகுதிகளுக்கு சென்று நிலைமைகளை பார்வையிடவுள்ளார்.
 இந்நிலையில் அவர் வருவதற்கு முன்னதாக போர் எச்சங்களை அகற்றும் நடவடிக்கையில் சிறிலங்கா இராணுவத்தினர் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

 இராணுவத்தினர் உடையணிந்தவர்களே போர் எச்சங்களை அகற்றும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர் என்று அதனை நேரில் கண்ட மக்கள் தெரிவித்துள்ளனர்.
 எச்சங்களை அகற்றும் பணிகள் மிக வேகமாக மேற் கொள்ளப்படுகின்றன என்றும் அப்பகுதியால் செல்லும் மக்கள் இதனை ஒளிப்படம் எடுக்க முற்பட்டால் விரட்டப்படுகின்றனர் என்றும் அவர்கள் கூறினர்.   
 இறுதிப் போரில் கைவிடப்பட்ட பல நூற்றுக்கணக்கான வாகனங்களின் சிதைந்த பகுதிகள் போர் எச்சங்களாக முள்ளிவாய்க்கால் பகுதியில் வீதியோரமாகக் குவிக்கப்பட்டிருந்தது.
 இவற்றி பெரும் பகுதி கடந்த திங்கட்கிழமை இரவு 7 மணியில் இருந்து அதிகாலை 5 மணிக்குள் அங்கிருந்து அகற்றப்பட்டதாக மக்கள் கூறு கின்றனர்.
 கனரக வாகனங்களின் உதவியுடன் போர் எச்சங்களை அகற்றும் பணியில் இராணுவத்தினர் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

 இது தவிர புதுக்குடியிருப்பு பொது விளையாட்டு மைதானம், சதந்திரபுரம் விளையாட்டுக் கழகமைதானம் ஆகியவற்றிலும் போரில் சிதைந்த வாகனங்களின் பாகங்கள் குவிக்கப்பட்டிருந்தன.   
 இவை வெளியே தெரியாதவாறு மூடி பெரிய மறைப்புக்களை இராணுவத்தினர் ஏற்படுத்தி வருகின்றனர் என்றும் மக்கள் கூறினர்.
 சிறிலங்கா அரசாங்கத்திற்கு எதிராக போர்க்குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ள நிலையில், நவனீதம்பிள்ளையில் வருகையால் மஹிந்த அரசாங்கம் பெரும் சங்கடத்தையும், அச்சத்தையும் எதிர்கொள்வதாக கொழும்பு தகவல்கள் தெரிவிக்கின்றன
 

0 கருத்துகள்:

கருத்துரையிடுக