வடபகுதியில் துப்பாக்கி வேட்டுச்சத்தங்களுக்கு ஓய்வு கொடுக்கப்பட்டுள்ளது. இனி சீனவெடிகளே சத்தமிடும் என்றிருந்த வேளையில், கடந்த 27ம் திகதி சாவகச்சேரிப் பகுதியில், ஒரே அணி சார்ந்த வேட்பாளர்களிடையே துப்பாக்கிச் சூடு இடம்பெற்றுள்ளமை, வடபகுதியில் பெரும் அச்சத்தையும்
ஆச்சரியத்தையும் ஏற்படுத்தியுள்ளது. துப்பாக்கிச்சூடு நடத்துமளவில் என்ன நடந்தாயிற்று என்ற கேள்வி நியாயமாயினும், அதற்கான பதிலை இந்த நாட்டில் அறிந்து கொள்வதற்குப் பல வருடங்கள் எடுக்கும். எதுவாயினும் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின்
குறிப்பிட்ட இரு வேட்பாளர்களிடையே ஏற்பட்ட முறுகல் நிலையும் அதனைத் தொடர்ந்து இடம்பெற்ற துப்பாக்கி வேட்டும் வடபகுதியில் மீண்டும் ஆயுத கலாசாரம் தலைதூக்கி விட்டதா? என்ற சந்தேகத்தை உருவாக்கியுள்ளது.
அதாவது, நாட்டில் ஆயுத கலாசாரம் முடிவுக்குக் கொண்டு வரப்பட்டு விட்டதென்று அரசு கூறுகின்ற நிலையில், ஆளும்தரப்பின் வேட்பாளர்கள் துப்பாக்கிச் சூடு நடத்தியமை, அதிலும் ஐ.நா. மனித உரிமை ஆணையாளர் நவநீதம்பிள்ளை யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்த நேரத்தில், ஜனாதிபதி இந்த நாட்டில் இல்லாத போது வடக்கில் துப்பாக்கிச் சூடு நடத்தியமை
சாதாரணமான விடயமன்று. இச் செயலானது வடபகுதியில் ஸ்ரீலங்கா சுதந்திரககட்சியை வேரூன்ற எடுத்த முயற்சிகளைக் கடுமையாகப் பாதிக்கும் என்று கூறலாம். இதற்கப்பால் வடபகுதியில் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச மேற்கொண்ட அரசியல் இராஜதந்திரம் தோற்றுவிட்டதென்று கூறுவது பொருத்தமுடையதாகும்.
அதாவது வடக்கு மாகாணத்தில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையிலான ஈழமக்கள் ஜனநாயகக் கட்சி போட்டியிடுவதை விரும்பாத ஜனாதிபதி, ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி போட்டியிட வேண்டும் என விரும்பினார். ஆளும் கட்சியின் சார்பில் மூன்று பிரிவுகள்
வேட்பாளர்களை நிறுத்திக் கொண்டன. இதில் ஈழமக்கள் ஜனநாயக கட்சியும் ஒன்றாயினும் அந்தக் கட்சி தனித்துவமாக, அமைதியாக தேர்தலைச் சந்திக்க தயாரான போது, ஆளும் கட்சியில் வேட்பாளர்களாகப் போட்டியிடும் ஏனைய இரு பிரிவுகளும் துப்பாக்கியால் சுடும் அளவில் நிலைமையை மோசமாக்கின.
இந்தச் சம்பவம் ஜனாதிபதிக்கு நிச்சயம் விருப்பமானதாக இருக்க முடியாது. ஆக, ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியை தேர்தலில் போட்டியிட
அனுமதித்திருக்க வேண்டும் என்ற முடிவுக்கு ஜனாதிபதி வருமளவில் அவர் நியமிததவர்கள் நடந்து கொண்டனர். எதுவாயினும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தொடர்ந்தும் மெளனத்தைக் கடைப்பிடிப்பதால் வடபகுதியில் அரசு நிறையவே கற்றுக் கொள்ளும். இதற்கு அங்கு நீங்கள் இங்கு நாங்கள் என்ற ஒரு புரிந்துணர்வை ஏற்படுத்துவது தமிழன் சரியான சந்தர்ப்பத்தில் ஒன்றுபட்டான் என்று உலகம் கூறும் அளவில் செய்யலாம்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக