18

siruppiddy

ஆகஸ்ட் 12, 2013

தலைவர் பிரபாகரன் தமிழ் தேசிய இனத்தின் உயிர், ஓர் ஆன்ம பலம்


”மற்ற அரசியல் கட்சித் தலைவர்கள் தொடர்ந்து கூட்டம் நடத்துறாங்க. ஆனா, சீமான் கலந்துகொள்ளும் கூட்டங்களுக்குத்தான் தடை, சில ஊர்களில் நுழையவும் தடை… இது ஏன்?”
”என் செயல்பாட்டை, பேச்சை, உணர்வை, கனவை எந்த சட்டதிட்டங்களாலும் தடுக்க முடியாது. ‘என் வளர்ச்சியைத் தடுத்து முடக்கணும்’னு திட்டம் போட்டா, அதிகபட்சம் பத்து வருஷம் என்னைக் கட்டுப்படுத்தி வெச்சிருப்பீங்களா? நான் வேற எதுவுமே பண்ணாம, பத்து வருஷம் படம் மட்டுமே எடுத்துட்டு இருக்கேன். அப்புறம் வேற யார் இருப்பா? நான்தான் இருப்பேன். இந்த அடக்குமுறைகள் எல்லாம் மேலும் மேலும் நம்மை வெறியேற்றி, இன்னும் வீரியமாகப் பாயவைப்பதற்கான வேலையே தவிர, வேறொன்றும் இல்லை!”
” ‘பிரபாகரன் இறந்துவிட்டார். அவரின் பெயரைப் பயன்படுத்திப் பணம் சம்பாதிக்கிறார்கள்’ என்ற குற்றச்சாட்டுகுறித்து உங்கள் கருத்து என்ன?”
”என்ன நடந்ததென்று யாருக்குமே தெரியவில்லை என்பதே சத்தியம். பயிற்சி எடுக்கும்போதுகூட தலைக் கவசம், புல்லட் ஜாக்கெட் இல்லாமல் என் தலைவன் நின்றது இல்லை. சாக்ஸ் வரை வெடி மருந்து நிரப்பி இருக்கும். குறைந்தது 200 பேருக்கு மேல் அவரைச் சுற்றி எப்போதும் பெட்ரோல் கேனுடன் நிற்பார்கள். ஒருவேளை என் அண்ணன் செத்திருந்தால், அந்தப் பாதுகாப்புப் படையினர் அவரைச் சாம்பலாக்கிவிட்டுத்தான் நகர்ந்திருப்பார்கள். சண்டையிட்டபோது கால் கருகிப்போனதால் எங்கள் அண்ணனுக்குக் ‘கரிகாலன்’ என்கிற வேறொரு பெயரும் உண்டு. ஆனால், அவர்கள் காட்டும் உடலில் கால் எங்கே கருகி இருந்தது? சில விஷயங்கள்ல நீங்கள் கேள்வி எழுப்பாமலே இருந்துவிட வேண்டும். ராஜபக்ஷே சொல்வதை நம்புறீங்க… நான் சொல்றதை நம்ப மாட்டீங்களா? என் அண்ணன் இருக்கும்போது என்ன செய்தோமோ, அதையெல்லாம் இப்பவும் ‘அவர் இருக்கிறார்’னு நினைச்சு செய்கிறோம். பிரபாகரன் என்பவர் ஒரு தலை, இரண்டு கை, இரண்டு கால் உள்ள உருவம்னு நீங்க நினைக்கக் கூடாது. அவர், தமிழ் தேசிய இனத்தின் உயிர்; ஓர் ஆன்ம பலம்! ‘இருக்கிறார்’ என்ற நம்பிக்கையோடு இந்த மக்கள் செயல்படும் போது, அதை அப்படியே விட்டுடணும்! புலிகளிடம் நான் காசு வாங்கிட்டுப் பேசுறேன்னு சொல்றாங்க. அண்ணனை நான் சந்திச்சப்ப அவர் எனக்கொரு கடிகாரம் தந்தார். பிறகு, ‘உன் பாதுகாப்புக்கு வெச்சுக்க’னு ஒரு கத்தி தந்தார். அவ்வளவுதான்! பொணத்தைக் கட்டிப்பிடிச்சு அழுற என் இன மக்கள் எனக்கு பணத்தை அனுப்பிட்டா படுத்துக்கிடப்பான்?”
”இணையத்தில் உங்களை காமெடியனைப் போல சித்திரிக்கிறார்களே?”
” ‘விமர்சனம் என்பது எப்போதும் வெறும் சொற்கள்தானே தவிர; நம்மைக் காயப்படுத்தும் கற்கள் அல்ல’ – இது என் அண்ணன் பிரபாகரன் சொன்னது. அதைக் கடந்து போயிடணும். தந்தை பெரியார், காமராஜர், என் அண்ணன் போன்றவர்களைப் பற்றி எல்லாம் பேசாததையா என்னைப் பற்றிப் பேசிடப்போறாங்க? பொழுது போகாம தண்ணி அடிச்சுட்டு, சிகரெட் புகைச்சுட்டுப் எழுதிட்டுப் போறவங்களுக்கு எல்லாம் பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. மக்களின் முன்வந்து ‘சீமான் அயோக்கியன்’னு பேசுங்களேன். அந்தத் துணிச்சல் இருக்காது. ‘அப்படியான எந்த விமர்சனத்துக்கும் பதில் எழுதாதீங்க’ன்னு என் தம்பிகளிடம் சொல்லியிருக்கேன். ‘சீமான் முதல்வராகும் கனவோடு இருக்கிறார்’னு என்னைக் கிண்டலடிக்க அவங்க யாருங்க?”
”என் அடுத்த கேள்வியே அதுதாங்க. ‘நான் முதல்வரானால்…’னு பல இடங்கள்ல பேசுறீங்க. அது அத்தனை எளிதான காரியமா?”
”அதில் என்ன சிரமம் இருக்கு? எம்.ஜி.ஆர்., கருணாநிதி, ஜெயலலிதாவால் ஆகிட முடியும். ஸ்டாலினால் ஆகிட முடியும்னா, சீமானால் முதல்வராக முடியாதா? விஜயகாந்த் முதல்வராக விரும்பும்போது, சீமான் ஆகக் கூடாதா? இந்த மண்ணின் பிள்ளைகளான எங்களுக்கு, ‘இந்த மண்ணை ஆளும் லட்சியம்கூட இருக்கக் கூடாது’னு நினைச்சீங்கன்னா, அந்த மாதிரி துரோகம், அயோக்கியத்தனம் இந்த உலகத்தில் கிடையாது. கருணாநிதி, எம்.ஜி.ஆர்., ஜெயலலிதாவிடம் இருந்த நாடு அய்யா நல்லகண்ணுவிடமும் பழ.நெடுமாறனிடமும் இருந்திருந்தால், என்றைக்கோ உருப்பட்டு இருக்கும். பத்து, இருபது பொண்டாட்டிக் கட்டி, ஏகப்பட்டப் புள்ளைங்களைப் பெத்து… எல்லாருக்கும் சொத்துச் சேர்க்குறதுக்கும், ஆத்து மண்ணை 60 ஆயிரம் கோடிக்கு அள்ளி விற்கவும், கமிஷன் வாங்கவுமா நாங்க ஆட்சிக்கு வர்றோம்னு சொல்றோம்?”
”உங்கள் திருமணச் செய்தியைச் சொல்லுங்களேன்..?”
”செப்டம்பர்-8 எனக்குக் கல்யாணம். எனக்கு மனைவியா வரப்போகும் கயல்விழி… முன்னாள் சபாநாயகர், அய்யா காளிமுத்து அவர்களின் மகள். தேசியத் தலைவர் பிரபாகரனைப் பற்றி எம்.ஜி.ஆர். அவர்களிடம் அதிகமாகச் சொன்ன வகையில், காளிமுத்து அய்யா தெரிந்தும் தெரி யாமலும் விடுதலைப் போராட்டத்துக்கு அதிக அளவில் உதவியுள்ளார். அந்த அடிப்படையில் இன விடுதலைப் போராட்டத்தில் கயல்விழிக்கு அதீதப் பற்று. தம்பி பாலச்சந்திரன் இறந்தபோது, திருச்சியில் பட்டினிப் போராட்டம் நடத்தி னேன். அந்தச் சமயத்தில்தான், ‘நான் இன்னார் மகள், சென்னை சட்டக் கல்லூரியில் படிக்கி றேன். நானும் உங்கள் இயக்கத்தோடு இணைந்து போராடணும்னு நினைக்கிறேன்’னு கயல்விழி பேசினாங்க. ஒரு பெண் இப்படிப் பேசியது பெருமகிழ்ச்சி, நம்பிக்கையைத் தந்தது. ‘சென்னை வந்ததும் சந்திக்கிறேன்’னு சொன்னேன். ஆனால், வேலைப்பளுவில் மறந்தேவிட்டேன். ‘சந்திக்க லாம்னு சொல்லிட்டு நேரம் தர மறுக்கிறீங்களே’னு மறுபடியும் பேசினாங்க. அதைத் தொடர்ந்து சந்தித்தோம். பேசினோம். புதிதாக என்னைப் பற்றிப் பேசி, புரியவைக்கவேண்டிய அவசியம் அவங்களுக்கு இல்லாமல் இருந்தது. இருவருக் குள்ளும் புரிதல் இருந்தது. ‘ஆணும் பெண்ணும் இணைந்துதான் சமூக மாற்றத்தை ஏற்படுத்த முடியும்’னு என் தேசியத் தலைவர் சொல்வார். இந்த மண்ணையும் மக்களையும் நேசிக்கிற இரண்டு பேர் இணைந்துப் பயணிப்பது சரியாக இருக்கும் என நினைத்து இந்த முடிவெடுத்தோம். அப்படித்தான் இந்தத் திருமணம் முடிவானது!”
”எந்த நேரமும் சிறையில் அடைக்கப்படக்கூடிய ‘மாப்பிள்ளை’யை கயல்விழி வீட்டில் எப்படி எதிர்கொண்டார்கள்?”
”எடுத்த எடுப்பில் என்னை எப்படி ஏற்றுக்கொள்வார்கள்? அவங்க ஓர் அரசியல் இயக்கத்தில் இருக்காங்க. நானும் ஓர் அரசியல் இயக்கத்தில் இருக்கேன். நடுவில் கேடுகெட்ட சாதிகள் வேற இருக்கு. எல்லாத்தையும் மீறி, பூரண சம்மதத்துக்குப் பிறகுதான் இந்தத் திருமணம் நடக்குது. நெடுமாறன் ஐயா, எங்க அப்பா மணிவண்ணன், எங்க அண்ணன் சந்திரசேகர் எல்லாரும்தான் எனக்காகப் பொண்ணு கேட்டுப் போய் பேசி முடிச்சாங்க. ஏற்கெனவே பலமுறை சிறைக்குச் சென்று வந்தவன்தானே நான். சிறைக்குச் செல்வதைப் பற்றி அவர்கள் கவலைப்படவில்லை. ஆனால், எனக்கும் எங்கய்யா பழ.நெடுமாறன், வைகோ அண்ணன் மூவருக்கும் உயிருக்கு ஆபத்துனு செய்தி வந்ததும் கொஞ்சம் பயந்தாங்க. மற்றபடி யாவையும் நலம்!”
‘தர்மபுரி கலவரம், இளவரசன் மர்ம மரணம்…இந்த விவகாரத்தில் நீங்கள் உள்பட அனைத்து அரசியல் கட்சிகளும் குற்றவாளிகளை வெளிப்படையாக அடையாளம்காட்டவோ, தாக்கிப் பேசவோ தயங்குவது ஏன்?”
”சாதி என்பது இரண்டு பக்கமும் கூர்மையான கத்தி. எதிரில் நிற்பவனையும் குத்தும் எடுத்தவனையும் குத்தும். ஆனா, நாங்கள்பொது வான பிள்ளைகள். சாதி மத உணர்வைசாகடிச் சுட்டுதான் ‘தமிழர்’ என்ற உணர்வோடுமேலெ ழுந்து வர்றோம். திவ்யாவுக்குச் சாதி வெறி இருந்திருந்தால், இளவரசனை மணந்து இருக்குமா? இளவரசன் மரணத்தைப் பா.ம.க-வில் உள்ளவங்க எல்லாரும் கொண்டாடிட்டாங்களா என்ன? அவங்களுக்குள்ளும் வருத்தம் இருக்கும். இளவரசனே, ‘திவ்யாவைக் காதலிப்பதற்கு அதிகமா உதவியது வன்னிய நண்பர்கள்தான்’னு சொன்னானே! அதேபோல் சாதி மறுப்புத் திருமணம் செய்துகொண்டு வாழும் ஏழு குடும்பங்கள் தர்மபுரியில் இருக்கின்றன. ஆனால், திவ்யா – இளவரசன் காதல் மட்டும் திட்டமிட்டு அரசியல் நோக்கத்துக்காகத் திசைத் திருப்பப்பட்டு இருக்கு. அதை கொம்பு சீவிக் குத்தவிட்டு வேடிக்கை பார்ப்பது சரியா? இதுக்கு ‘அறிக்கை விடு, கருத்து சொல், எதிர்த்துப் பேசு’ என்ற சிந்தனைதான் பிழை. அதைச் சரிபண்ணணும்!”
{காணொளி}

0 கருத்துகள்:

கருத்துரையிடுக