வேலை கிடைக்கும். வெளிநாட்டிற்குச் செல்லலாம். விசா கிடைக்கும் என்ற ஆவலோடு வந்த வட இலங்கையைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட இளைஞர்கள் வவுனியா நகர வீதிகளில் கைவிடப்பட்ட நிலையில் இருக்கின்றனர்.
புருணை நாட்டில் வேலை வாய்ப்பு பெற்றுத் தரலாம் எனக் கூறிய வேலை வாய்ப்பு முகவர் ஒருவரை நம்பி, மூன்று மாதங்களுக்கு முன்னர், ஐம்பதினாயிரம் ரூபாய் ரொக்கப் பணத்தைக் கட்டியதாக அவர்கள் தெரிவித்தனர்.
"திங்களன்று விசா தருவதாகக் கூறி நேர் முகப் பரீட்சைக்கு வருமாறு வவுனியா ஈரப்பெரியகுளத்தில் உள்ள விருந்தினர் விடுதியொன்றிற்கு வருமாறு எங்களை அழைத்திருந்தார்கள். காலையிலேயே அங்கு சென்று காத்திருந்தோம். வருவதாகக் கூறியவர்கள் வரவே இல்லை. மதியத்தின் பின்னர் அவர்கள் தொலைபேசிகளையும் துண்டித்துவிட்டார்கள். தொடர்பு கொள்ள முடியவில்லை. நாங்கள் பணம் செலுத்திய மதவாச்சி நகரில் உள்ள அலுவலகத்திற்குச் சென்று விசாரித்த போதிலும் சரியான பதில் எங்களுக்குக் கிடைக்கவில்லை" என பாதிக்கப்பட்ட இளைஞர்கள் தெரிவித்தனர்.
ஜயசிங்க என்பவர் தான் விமானப் படையில் பணியாற்றுவதாகவும், வெளிநாட்டில் வேலைவாய்ப்பு பெற்றுத் தருவதாகத் தெரிவித்தாகவும் ஆனஆல் அவர் சொன்னபடி ஏதும் நடக்கவில்லை என்றும் அவர்கள் புலம்புகின்றனர்.
"இன்று காலை எட்டு மணிக்கெல்லாம் ஈரப்பெரியகுளத்திற்கு வாருங்கள். விசா தருவோம் என்றார்கள். அங்கு போய் காத்திருந்ததுதான் மிச்சம். ஒருவருமே வரவில்லை. அங்குள்ள ஓட்டல் ஒன்றில் ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதாகக் கூறினார்கள். அங்கு எந்த ஏற்பாடும் செய்யப்படவில்லை. ஏமாற்றத்தோடு திரும்பிய நாங்கள் வவுனியா பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப் போனால், அவர்கள் மதவாச்சியில் பணம் கட்டியபடியால், அந்த பொலிஸ் நிலையத்தில் சென்ற முறையிடுமாறு கூறி அனுப்பி விட்டார்கள். இனி என்ன செய்வது என்று தெரியாமல் நடு வீதியில் நிற்கிறோம்" என்று அவர்கள் கவலை வெளியிட்டனர்.
யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த 150 பேர் இவ்வாறு வெளிநாட்டு வேலைவாய்ப்பிற்காகப் பணம் செலுத்தியிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டது.
போர் முடிந்த பிறகும் வடக்குப் பகுதிகளில் வேலை வாயப்புகள் பெரிதாக உருவாகவில்லை. மேலும் அங்கேயிருக்கும் பல்வேறு நெருக்கடிகள் காரணமாகவும் பலர் இங்கையில் இருந்து வெளியேற முற்படுகின்றனர்
0 கருத்துகள்:
கருத்துரையிடுக