போர்ச் சூழல் நிலவிய காலத்தில் பல்வேறுபட்ட இழப்புக்களை சந்தித்தும் அடிக்கடி உள்ளக இடம்பெயர்வுகளுக்கு ஆளாகியும் வாழ்ந்த அம்பாறை மாவட்டத்திலுள்ள காஞ்சிரங்குடா, தங்கவேலாயுதபுரம் கிராம மக்களை மீள்குடியேற்றம் செய்துள்ள போதிலும் மீள்குடியேற்றம் செய்யப்படும் மக்களுக்கு வழங்கப்படும் சலுகைகள் முறையாக வழங்கப்படவில்லை.
இதனையிட்டு கிழக்கு மாகாண சபை விசேட கவனம் செலுத்த வேண்டும் என மாகாண சபை உறுப்பினர் எம். இராஜேஸ்வரன் தெரிவித்தார்.
கிழக்கு மாகாணசபை அமர்வின் போது 02.07.2009ஆம் ஆண்டு மீள்குடியமர்த்தப்பட்ட காஞ்சிரங்குடா, தங்கவேலாயுதபுர கிராம மக்களின் தேவைகள் குறித்தும் இம் மக்களுக்கு இழைக்கப்பட்ட அநீதி குறித்தும் அவர் தனிநபர் பிரேரணை சமர்ப்பித்து உரையாற்றும் போதே மேற்கண்டவாறு கூறினார்.
அவர் மேலும் குறிப்பிடுகையில், அம்பாறை மாவட்டத்தின் திருக்கோவில் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட காஞ்சிரங்குடா கிராம சேவையாளர் பிரிவில் 68 குடும்பங்களும் சாகாமம் பிரதேச செயலாளர் பிரிவில் 126 குடும்பங்களும் 02.07.2009ஆம் திகதி மீள்குடியேற்றம் செய்யப்பட்டார்கள்.
இவர்களுக்கு தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் தற்காலிக கொட்டில்களை அமைத்துக் கொடுத்தன. ஆனால் அரசாங்கம் இம் மக்களுக்கு பொருளாதார உதவிகளை அளிக்கவில்லை. வீடமைப்பு வசதிகளை செய்து கொடுப்பதில் அக்கறை காட்டாமல் இருந்து வருகின்றது.
அதே போன்று தங்க வேலாயுதபுரம் கிராம சேவையாளர் பிரிவிலுள்ள 424 குடும்பங்களும் கஞ்சிக்குடிச்சாறு கிராம சேவையாளர் பிரிவிலுள்ள 406 குடும்பங்களும் 2009ஆம் ஆண்டு நடந்த வன்செயலில் இடம்பெயர்ந்தார்கள். ஆனால் இம்மக்களை அரசாங்கம் மீளக்குடியமர்த்தவில்லை.
ஆனால் கஞ்சிகுடியாற்றில் 224 குடும்பங்களும் தங்கவேலாயுதபுரத்தில் 270 குடும்பங்களும் தமது நிலங்களில் சுயமாக குடியேறி விவசாய நடவடிக்கையில் ஈடுபட்டு வருவதை காணலாம். இது ஒரு புறமிருக்க கிழக்கு மாகாண சபையினால் மூன்று வருடங்களுக்கு முன்னர் இம் மக்களுக்கு கிணறுகளை அமைப்பதற்காக வெட்டப்பட்ட குழிகள் உண்டு. ஆனால் கிணறுகள் கட்டப்படவில்லை.
கிணறுகள் அமைக்க ஒதுக்கப்பட்ட நிதிக்கு என்ன நடந்தது? போரினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்கவென நல்லின கறவை பசுக்கள் தங்கவேலாயுதபுரத்திற்கு கொண்டு வரப்பட்டன. ஒரு சில தினங்களில் அவற்றை கொண்டு வந்தவர்களே அதனை கொண்டு சென்று விட்டனர்.என்றார்
0 கருத்துகள்:
கருத்துரையிடுக