18

siruppiddy

ஜூன் 17, 2013

ஈழத்தமிழருக்கான குரல் ஒன்று ஓய்ந்தமணி ,,மணிவண்ணன் மாரடைப்பால் மரணமடைந்துவிட்டடாராம் செய்தி கேட்ட கணம் எங்கள் குடும்ப உறவொன்றை இழந்த உணர்வு.
இயக்குனராக வில்லனாக சிறந்த குணச்சித்திர நடிகராக நகைச்சுவை நடிகராக இன உணர்வாளராக ஈழத்தழிழருக்கான குரலாக உலகத்தமிழர் முன் அறிமுகமான அற்புதமான கலைஞன் ,  மனிதநேயம்மிக்க மனிதன்.
2001ம் ஆண்டு ஐபீசி வானொலியும் ரீரீஎன் தொலைக்காடசியும் இணைந்து சுவிற்சர்லாந்தில் நடாத்தியபுத்தாண்டே வருக என்ற அந்த நிகழ்வுக்காய் திரு. மணிவண்ணன் அவர்கள் வந்திருந்தார். அப்போது ஐபிசி தமிழின் சுவிஸ் செய்திப்பிரிவில் நான் பணியாற்றி வந்ததால் அவரது வரவு பற்றிய செய்தியை ஐபிசி தமிழ் ஊடாக எடுத்து வரவேண்டிய பணி எனது பணியாக இருந்தது. திரைத்துறை சார்ந்த ஒரு கலைஞரின் வரவை புகழ்ந்து சொல்லக்கூடிய மனநிலையில் நான் இருக்கவில்லை. அப்போது என்னோடு தொடர்பு கொண்ட அன்றைய ஐபிசியின் நிகழ்ச்சித் தொகுப்பாளர்களில் ஒருவரான பரா பிரபா அண்ணா மணிவண்ணன் அவர்களின் தழிழுணர்வு பற்றியும் ஈழத்தமிழர்பால் அவர்கொண்ட அன்பு ஆதரவுபற்றியும் விளக்கிக் கூறினார். அன்றுதான் அவரை அவர் திரைத்துறையையும் கடந்து ஒரு மனிதநேயம்மிக்க தமிழின உணர்வாளனாகக் கண்டேன்.
புத்தாண்டு நிகழ்வுக்காய் சுவிஸ் வந்த அவரை நிகழ்வுநாளன்று கவனிக்கின்ற பொறுப்பு எனக்கு இடப்பட்டிருந்தது. முழுநாளும் அவரோடு இருக்கக்கூடிய வாய்பு தமிழ் தமிழினம் திரையுலகம் என பல விடயங்கள் பற்றி நீண்டநேரம் உரையாடக்கூடிய வாய்ப்பு. மிகவும் அன்பான மனிதர். மனிதநேயம் மிக்க மனிதர். நிகழ்வு நாளன்று அவரது உடல்நிலை சரியில்லை ஆனபோதும் ரசிகர்களின் வேண்டுகோளுக்கு இசைவாக பல மணிநேரம் மேடையில் கழித்ததோடு மட்டுமல்லாமல் இளையதலைமுறை ரசிகர்களின் விருப்புக்கிசைவாக அவர்களோடு இணைந்து நடனமொன்றினையும் வழங்கியிருந்தார். திரையுலகிலிருந்து வரும் பலரும் நிகழ்வு நேரம் வரை எமக்கு மண்டபத்திற்கு அருகே நாம் ஓய்வெடுப்பதற்கு கண்டிப்பாக நட்சத்திரவிடுதில் அறை ஒதுக்க வேண்டும் என்று அடம்பிடிப்பவர்கள் மத்தியில் இவர் எங்களில் ஒருவராய் அந்த நிகழ்வுநாளில் ஒருங்கிணைந்திருந்தார்.
அநேகமாக அந்த நிகழ்வுக்குப் பின்னர்தான் அவரின் தமிழ் இன உணர்வும அறியப்பட்டு ஈழத்தமிழரின் அன்புக்குரியவராகவும் மாறிப்போனார். இராமேஸ்வரம் திரைப்படத்தில் ஈழத்தமிழனாகவே மாறிப்போனார்.
புத்தாண்டு நிகழ்வினைத் தொடர்ந்து மறுநாள் சுவிற்சர்லாந்து வாழ் கலைஞர்களுடனான சந்திப்பு ஒன்று ஒழுங்குபடுத்தப்பட்டிருந்தது. சுவிற்சர்லாந்து வாழ் ஈழத்தமிழர் பலரும் திரைத்துறையில் கால் பதிக்கும் நோக்கோடு குறும்படங்களை எடுக்கத் தொடங்கியிருந்த காலம். பல குறும்பட இயக்குனர்கள் பல நடிகர்கள் என பலரும் அந்த ஒன்றுகூடலில் பங்கேற்றிருந்தார்கள். அவர்களில் பெரும்பாலானவர்களின் கருத்து நாங்கள் எடுக்கிற படங்களை மக்கள் விரும்பிப் பாக்கினம் இல்லை என்ற குற்றச்சாட்டை மக்கள் மீது வைத்திருந்தார்கள். அவர்களுக்கு தெளிவான விளக்கங்களை வழங்கியிருந்தார். மக்கறைக் குறை சொல்ல வேண்டாம் மக்கள் எதை விரும்புகின்றார்கள் என்பதை நாடி பிடித்துப் பார்த்து அவர்களுக்கு தேவையானதை கொடுப்பதுதான் கலைஞர்களான எமது கடமை என தெளிவுபடுத்தினார். நிச்சயமாக அவர் போன்றோரின் வழி காட்டல்களும் இன்றைய புலம்பெயர் ஈழத்தமிழரின் வெற்றிப்பாதை நோக்கிய திரைத்துறை முயற்சிகளுக்கு சான்றாக நிற்கின்றது.
ஒரு அற்புதக்கலைஞனை இனஉணர்வாளனை மனிதநேயம் மிக்க மனிதனை எங்கள் உறவை இழந்து நிற்கின்றோம். அவர் ஆத்மா அமைதியாய் உறங்க எமை ஆளும் சக்தியும் இயற்கையும் துணை நிற்கட்டும்..

0 கருத்துகள்:

கருத்துரையிடுக