18

siruppiddy

ஜூன் 02, 2013

அரசியல் சாசனத்தில் பெருந்தோட்ட**


 ஐக்கிய தேசிய கட்சியினால் தயாரிக்கப்படும் புதிய அரசியல் சாசனத்தில் பெருந்தோட்ட தொழிலாளர்களின் ஆலோசனைகளும் உள்வாங்கப்படும் என ஐக்கிய தேசிய கட்சியின் தலைவரும் எதிர்க்கட்சி தலைவருமான ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.
நுவரெலியா தொகுதி ஐ.தே.க.அமைப்பாளர் சந்தனலால் கருணாரட்னவின் ஏற்பாட்டில் நுவரெலியாவில் நடைபெற்ற கூட்டத்தில் உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
அவர் தொடர்ந்தும் குறிப்பிடுகையில்,
1978 ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட அரசியல் திருத்த யாப்பில் மலையக பெருந்தோட்ட தொழிலாளர்களின் ஆலோசனைகளும் அவர்களின் அபிலாஷைகளும் உள்வாங்கப்படவில்லை. அந்த அரசியல் யாப்பு அறிமுகப்படுத்தப்பட்ட போது மலையக இந்திய வம்சாவளி மக்கள் பிரஜாவுரிமை மற்றும் வாக்குரிமை அற்றவர்களாக இருந்ததாலேயே அவர்களின் ஆலோசனைகளும் அபிலாஷைகளும் சாசனத்தில் உள்ளடக்கப்படவில்லை.
ஆனால் இன்று மலையக இந்திய வம்சாவளி மக்களுக்கு பிரஜாவுரிமையை வாக்குரிமையையும் ஐக்கிய தேசிய கட்சி பெற்றுக் கொடுத்துள்ளது.எனவே இந்த மக்களுக்கு இந் நாட்டில் வாழ்வதற்கு சகல உரிமைகளும் இருக்கின்றன.
ஆகையால் ஐக்கிய தேசிய கட்சியினால் தயாரிக்கப்படும் அரசியல் சாசனத்தில் பெருந்தோட்ட தொழிலாளர்களின் ஆலோசனைகளையும் அபிலாஷைகளையும் சேர்த்துக் கொள்வதற்கான நடவடிக்கைகளை ஐக்கிய தேசிய கட்சி மேற்கொண்டுள்ளது. மலையக மக்களின் ஆலோசனைகளை பெற்றுக் கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இன்று இந்நாட்டில் சுயாதீனமான நீதிமன்ற தீர்ப்பு இல்லை. சுயாதீனமாக பொலிஸ் சுயாதீனமாக அரச அதிகாரிகள் செயல்பட முடியவில்லை. தற்பொழுது இந்நாட்டில் சர்வாதிகார ஆட்சியே நடைபெறுகிறது. இதற்கு முற்றுப்புள்ளி வைத்து ஜனநாயக ஆட்சியை கொண்டுவருவதற்கு அனைத்து மக்களும் ஒன்றிணைந்து ஐக்கிய தேசிய கட்சியின் ஆட்சியை கொண்டு வருவதற்கு ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் எனக்கூறினார்.
 இக்கூட்டத்தில் ஐக்கிய தேசிய கட்சியின் பொதுச் செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான திஸ்ஸ அத்தநாயக்க, நாடாளுமன்ற உறுப்பினர் ஆர்.யோகராஜன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக