பாதசாரிக் கடவையில் பதிக்கப்பட்டுள்ள கல்லை எடுத்துக் காட்டி கொழும்பு மாநகர சபையில் சர்ச்சையை கிளப்பிய ஐக்கிய ஜனநாயக முன்னணியின் உறுப்பினர் ரோய் நிஷாந்த போகாவத்த, வேலைத்திட்டங்களுக்கான ஒப்பந்தங்கள் வழங்கப்படும்போது அது தொடர்பில் மாநகரசபை மீள் பரீசிலனை செய்ய வேண்டுமென்றும் சபையில் கோரிக்கை விடுத்தார்.
கொழும்பு மாநகர சபையின் மாதாந்த பொதுச்சபைக்கூட்டம் நேற்று வியாழக்கிழமை மேயர் ஏ.ஜே.எம். முஸம்மில் தலைமையில் கூடியபோதே உறுப்பினர் ரோய் போகாவத்த இப்பிரச்சினையை கிளப்பினார்.
இங்கு உரையாற்றிய ஐக்கிய ஜனநாயக முன்னணியின் மாநகரசபை உறுப்பினர் ரோய் போகாவத்த,
கொழும்பு கோட்டை மின்சார சபைக்கு முன்பாக பாதசாரிக் கடவையில் சிகப்பு நிறக்கற்களை பதிப்பதற்கான ஒப்பந்தம் தனியார் நிறுவனமொன்றிடம் கையளிக்கப்பட்டுள்ளது. இன்று அந்த வழியாக வரும் போது பதியப்பட்ட கற்கள் தரமில்லாமை கண்டுப்பிடிக்கப்பட்டது.
சிகப்பு நிறக்கற்கள் அதற்கான மூலப்பொருட்களை கலந்து தயாரிக்கப்படவேண்டும். ஆனால், இப்பாதசாரிக் கடவையில் பதியப்பட்டுள்ள கற்கள் சிகப்பு நிற வர்ணம் தீட்டப்பட்டவை. மக்கள் பாதையைக் கடக்கும் போதும் மழை வெயிலால் காலப்போக்கில் சிகப்பு வர்ணம் மறைந்து வெள்ளை நிறமாக மாறிவிடும். எனவே, ஒப்பந்தங்கள் வழங்கும்போது அதிகாரிகள் நிபந்தனைகளை விதிக்க வேண்டும். நகர சபை பொறியியலாளர்கள் இது தொடர்பில் கவனம் செலுத்த வேண்டும்.
பலகோடி ரூபா இதற்காக செலவு செய்யப்படுகின்றது. எனவே, கொழும்பு மாநகரசபையின் பணம் வீணாவதைத் தடுக்க வேண்டும். வேலைத்திட்ட ஒப்பந்தங்களை வழங்கிய பின்னர் அவ்வேலைகள் எவ்வாறு நடைபெறுகின்றதென்பதை மீள்பரிசீலனை செய்ய வேண்டுமென்றார்.
இதற்கு பதிலளித்த மேயர் ஏ.ஜே.எம். முஸம்மில் இந்த வேலைத்திட்டம் கொழும்பு மாநகர சபையால் மேற்கொள்ளப்படவில்லை. உலக வங்கியின் நிதியுதவியுடன் நகர அபிவிருத்தி அதிகார சபையே முன்னெடுக்கின்றது. எனவே, இது தொடர்பில் கண்காணிக்கும் அதிகாரம் நகர அபிவிருத்தி அதிகார சபைக்கே உள்ளது என மேயர் தெரிவித்தார்.
இதன்போது குறுக்கிட்ட உறுப்பினர் ரோய் போகாவத்த,
நகர அபிவிருத்தி அதிகார சபையின் திட்டமெனக்கூறி இதனை வெறுமனே கைவிட்டுவிட முடியாது. இப்பிரச்சினையை பாதுகாப்பு செயலாளரின் கவனத்திற்கு கொண்டு வருவதன் மூலம் வேலைத்திட்டம் சரியான முறையில் முன்னெடுப்பதற்கான நடவடிக்கைகளை அவர் மேற்கொள்வாரென்றும் உறுப்பினர் ரோய் போகாவத்த தெரிவித்தார்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக