18

siruppiddy

ஜூலை 23, 2013

இரத்தக் கறைபடிந்த நாள் 30 ஆவது ஆண்டு நினைவேந்தல்


1983 ஆம் ஆண்டு ஜூலை 23 இலங்கை வரலாற்றில் கறுப்புத்தினம் இரத்தக் கறைபடிந்த நாள். பேரின வாதிகள் மிருகங்களாக மாறித் தமிழர்களை வேட்டையாடிய கொடுமை மிகுநாள். ஆயிரக் கணக்கான அப்பாவித் தமிழர்கள் கொலையுண்ட 30 ஆவது ஆண்டு. 
இந்த இனப்படுகொலை அரங்கேறி 30 ஆவது ஆண்டை எட்டியதை முன்னிட்டு பிரிட்டனில் இன்று செவ்வாய்க்கிழமை மாபெரும் கவனவீர்ப்புப் போராட்டம் ஒழுங்குபடுத்தப்பட்டுள்ளது. அத்துடன் புலம்பெயர் தமிழர்கள் வாழும் தேசங்களிலும் பல்வேறு அனுஷ்டிப்பு நிகழ்வுகள் ஒழுங்குபடுத்தப்பட்டுள்ளன. 
1983 ஆம் ஆண்டு ஜூலை 23 ஆம் திகதி முதல் சுமார் ஒருவார காலத்துக்கு நாடு முழுவதும், குறிப்பாகத் தலைநகரில் தமிழர்கள் உயிருடன் எரியூட்டப்பட்ட, கண்ட துண்டமாக வெட்டிக் கொல்லப்பட்ட, வீடுகள், வர்த்தக நிலையங்கள் சூறையாடப்பட்ட, எரியூட்டப்பட்ட கொடூரமிக்க நிகழ்வுகள் அரங்கேறிய நாள். 
இந்தக் கொடூரங்களினால் 3 ஆயிரம் தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டதுடன், 25 ஆயிரம் பேர் அங்கவீனர்களாயினர். ஒரு லட்சத்து 50 ஆயிரம் தமிழர்கள் வீடுகள், வர்த்தக நிலையங்கள் இழந்து நிர்க்கதியாகினர். இந்த அவலங்களைச் சுமந்து 30 ஆவது ஆண்டு முன்னிட்டு பிரிட்டன் தமிழர் பேரவையினால் கவனயீர்ப்புப் போராட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 
இன்று மாலை 4 மணியிலிருந்து இரவு 7 மணி வரை, பிரிட்டன் பிரதமர் அலுவலகத்தின் முன்பாக இந்தக் கவனயீர்ப்பு நிகழ்வுகள் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளன.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக