சர்ச்சைக்குரிய செனல்4 ஆவணப்படத்தின் இயக்குனர் க்லம் மக்ரே இலங்கைக்கு விஜயம் செய்ய விரும்புவதாகத் தெரிவித்துள்ளார். இலங்கையில் நடைபெறவுள்ள பொதுநலவாய நாடுகள் தலைவர்கள் அமர்வுகள் தொடர்பான செய்திகளை சேகரிக்கும் நோக்கில் இலங்கைக்கு விஜயம் செய்ய உள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.
எனினும், இலங்கை அரசாங்கம் தமக்கு நாட்டுக்குள் பிரவேசிக்க அனுமதியளிக்குமா என்பது சந்தேகமே என மக்ரே தெரிவித்துள்ளார். ஊடகவியலாளர் என்ற ரீதியில் குறித்த அமர்வுகள் பற்றிய செய்தி சேகரிப்பில் ஈடுபட அனுமதியளிக்கப்பட வேண்டியது அவசியமானது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
பொதுநலவாய நாடுகள் தலைவர்கள் அமர்வுகள் குறித்த செய்தி சேகரிப்பில் ஈடுபட சர்வதேச ஊடகங்களுக்கு இலங்கை அரசாங்கம் பூரண அனுமதியளிக்கும் என எதிர்பார்ப்பதாக பிரித்தானிய வெளிவிவகார அமைச்சர் அலிஸ்டயர் பர்ட் தெரிவித்துள்ளார். இதன் அடிப்படையில் தாம் செய்தி சேகரிப்பதற்காக விண்ணப்பிக்க உள்ளதாக மக்ரே தெரிவித்துள்ளார்.
இதேவேளை, மக்ரேக்கு வீசா வழங்குவது குறித்து தற்போதைக்கு கருத்து வெளியிட முடியாது ஊடக அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார். மக்ரே புலம்பெயர் தமிழர்களின் விருப்பு வெறுப்புக்களுக்கு அமைய செயற்பட்டு வருவதாக அவர் குற்றம் சுமத்தியுள்ளார்
0 கருத்துகள்:
கருத்துரையிடுக