18

siruppiddy

ஜூலை 19, 2013

படத்தை தடை செய்க தமிழர் கட்சி அமைப்புகள் மாணவர்கள் கோரிக்கை!


 மெட்ராஸ் கபே என்ற இந்திப் படத்தை தமிழகத்தில் தடை செய்யக் கோரி இன்று சென்னை காவல்துறை ஆணையரிடம் நாம் தமிழர் கட்சி சார்பாகவும்தமிழர் பண்பாட்டு நடுவத்தின் சார்பாகவும் தமிழீழ விடுதலைக்கான மாணவர் கூட்டமைப்பு சார்பாகவும் மனு ஒன்று கையளிக்கப்பட்டது.
அப்போது நாம் தமிழர் கட்சி மற்றும் தமிழ் அமைப்புகள் காவல்துறை ஆணையர் அலுவலகம் முன்பு பெரும்திரளாக நின்று ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
வெளியாகவிருக்கும் மெட்ராஸ் கபே என்ற திரைப்படத்தை நாம் தமிழர் கட்சி தமிழர் பண்பாட்டு நடுவம் உள்ளிட்ட தமிழ் அமைப்பினர் முன்னரே பார்க்க வலியுறுத்தியும் அப்படத்தை தடை செய்யவும் கோரிக்கை வைக்கப்பட்டது.
சென்னை மாநகர காவல்துறை ஆணையர் அவர்களுக்கு கீழ்கண்ட மனு கொடுக்கப்பட்டது. அந்த மனுவில் கொடுக்கப்பட்டுள்ள விவரம் வருமாறு.
தமிழகம் உள்ளிட்ட பல மாநிலங்களில் வெளியாகவிருக்கும் 'மெட்ராஸ் கபே' என்ற திரைப்படம் ஈழ விடுதலையை ஆதரிக்கும் 'விடுதலை புலிகள்' அமைப்பை தீவிரவாதிகளாகவும் அதிலுள்ள தமிழர்களும் தீவிரவாதிகளாகவும் கேடயமாகவும் சித்தரித்திருப்பதாக அவர்கள் வெளியிட்ட முன்னோட்ட காட்சி மூலம் சந்தேகிக்கிறோம். தமிழர்களை தீவிரவாதிகளாக வெளி உலகிற்கு காட்ட முயலுவதை நாம் தமிழர் கட்சியோ தமிழ் மக்களோ தமிழர்களுக்காக இயங்கும் அமைப்புகளோ ஒரு போதும் ஏற்று கொள்ளாது.
ஏற்கனவே 'டேம் 999' திரைப்படத்தில் தமிழர்களுக்கு எதிரான கருத்துகளை பரப்பியபோது சர்ச்சை ஏற்பட்டு அப்படம் தமிழக அரசால் தடை செய்யப்பட்டது அறிந்ததே. அதே போல் 'விஸ்பரூபம்' என்ற படமும் தடை செய்யப்பட்டு சர்ச்சைகுரிய காட்சிகள் நீக்கப்பட்டு பின்னர் வெளியிடப்பட்டது. அதே போல சர்ச்சைக்குரிய காட்சிகள் இடம் பெற்று இருக்குமேயாயின் தமிழர்கள் நலன் சார்ந்து அப்படத்தை தமிழகத்தில் வெளியிட தடை விதிக்க வேண்டும். அப்படம் வெளியாவதற்கு முன் தமிழ் அமைப்பு நிர்வாகிகளுக்கு படம் திரையிட்டு காட்டப்பட வேண்டும் என கோரிக்கை வைக்கிறோம். இவ்வாறு அந்த மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது.
மனுவை பெற்றுக் கொண்ட காவல்துறை ஆணையர் இது குறித்து அரசுக்கு தெரிவிக்கப்படும் என்றும் மேற்கொண்டு படத்தை தடை செய்ய நீதி மன்றத்தை அணுகலாம் என்றும் ஆலோசனை வழங்கினார். தமிழக முதல்வர் இந்த விடயத்தில் உடனே நடவடிக்கை எடுக்குமாறு தமிழர் அமைப்புகள் கேட்டுக் கொண்டுள்ளன. இப்படத்தை தமிழகத்தில் திரையிட்டால் சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்படும் என்றும் திரை அரங்கத்தில் உள்ள திரைகள் கிழிக்கப் படும் என்றும் மாணவர் அமைப்புகள் தெரிவித்தன. எனவே இப்படம் தமிழகத்தில் திரையிடா வண்ணம் தமிழக அரசு பார்த்துக் கொள்ள வேண்டும் என தமிழ் அமைப்புகள் அறிவுறுத்தின

0 கருத்துகள்:

கருத்துரையிடுக