கூட்டமைப்பின் தலையாய கடமை சர்வதேசத்தினால் உற்று நோக்கப்படும் வடமாகாண சபைத் தேர்தலில் தொடர்ந்தும் பழுத்த பழங்களுக்கே முன்னுரிமை அளிப்பதை விடுத்து மாறாத கொள்கையும் உறுதியான வெற்றிவாய்ப்பும் படைத்த பல்கலைக்கழகத்தின் இளம் சமூகத்திற்கு வேட்பாளர் பட்டியலில் இடமளிக்கவேண்டியது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலையாய கடமை என்று யாழ்.பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பில் யாழ்.பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் இன்று வியாழக்கிழமை விடுத்துள்ள செய்திக்குறிப்பில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
மூன்று தசாப்த காலமாக இலங்கைத் தீவை ஆக்கிரமித்திருந்த போர் முடிந்து நான்கு வருடங்கள் கடந்த நிலையில், சர்வதேசத்திடமிருந்து விஸ்வரூபம் எடுத்துள்ள அழுத்தங்களினால் இலங்கை அரசாங்கமானது வடக்கு மற்றும் கிழக்கு மாகாண சபைகளுக்கான தேர்தல்களினை நடத்துவதற்கு முன்வந்ததன் தொடர்ச்சியாக இழுபறி நிலையிலிருந்த வடமாகாண சபைக்கான தேர்தலை எதிர்வரும் செப்டெம்பர் மாதமளவில் நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இதனடிப்படையில், தமிழ் மக்களால் பெரிதும் நேசிக்கப்படுகின்றதும் மிக நம்பிக்கைக்கிரியதுமான ஒரு பெரும் கட்சியானது தனது வேட்பாளர் தெரிவு தொடர்பாக தொடர்ந்து இழுபறி நிலையிலேயே சென்று கொண்டிருக்கின்றது.
இதன் தொடக்கமாக பல சுற்றுப் பேச்சு வார்த்தைகளின் பின் தெரிவு செய்யப்பட்ட முதலமைச்சர் வேட்பாளர் தொடங்கி யாழ். மாவட்டத்திற்கான வேட்பாளர் தெரிவு வரை இந்நிலை தொடர்ந்த வண்ணமே உள்ளது.
தமிழ்த் தேசியத்திற்கான குரலாக மக்களால் ஒருங்கிணைக்கப்பட்ட ஒரு பெரும் கட்சியானது தனது கொள்கை நிலைபாடு என்ன? என்பதையும் கடந்து செயல்படுகின்றதா? என ஐயுறவைக்கின்றது இம்முறை வேட்பாளர் தெரிவு.
கடந்த காலங்களில் தமிழ் தேசியத்தை தூற்றித் திரிந்தவர்களுக்கு இடமளித்தும் தொடர்ந்தம் தமிழ் தேசியத்திற்காய் குரல் கொடுபோரை பாராமுகப்படுத்துவதும் இக் கட்சியின் தற்போதைய பாரம்பரியமாக மாறியுள்ள மையானது வருத்தப்பட வைக்கின்றது.
இதனடிப்படையில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகமானது தமிழ் தேசிய நீராட்டப் பாதையில் தனது பங்களிப்பினை எவ்வாறெல்லாம் ஆற்றியிருந்தது என்பது யாவரும் அறிந்த உண்மை
தேசியப் பிரச்சினையில் மாறாத கொள்கை நிலைப்பாட்டைக் கொண்டிருந்த யாழ்.பல்கலைக்கழக சமூகத்தின் ஸ்திரத்தன்மையினை இன்றுவரை மாறாப் பண்போடு காணலாம். தமிழ் பேசும் மக்களது தீர்வுத் திட்டங்களோடு யாழ். பல்கலைக்கழக சமூகத்தின் பங்களிப்பினை யாரும் இலகுவில் மறந்து விட முடியாது.
போரிற்குப் பின்னரான இன்றைய சூழ்நிலையில் இக்கட்சியானது சகல தமிழ்க் காட்சிகளினையும் இனைத்துக் கொண்டமையானது ஒரு பக்கம் பாராட்டுக்குரிய விடயமாகும். அதே நேரம் இந்த ஒற்றுமையானது தொடர்வதோடு இக்கட்சிக்கென உண்டான கொள்கை நிலைப்பாடுகளை தொடர்ந்தும் தக்கவைத்தக் கொள்வது இந்த ஒன்றினைவின் வெற்றியும் எமது எதிர்பார்ப்புமாகும்.
தமிழ்த் தேசியத்தை நேசிக்கும் யாழ்.பல்கலைக்கழக சமூகமானது அன்றிலிருந்து இன்று வரை மாறாத நிலைப்பாட்டைக் கொண்டிருக்கையில் தமிழ் மக்களால் நேசிக்கப்படும் ஒரு பெரிய கட்சியானது யார் தேசியத்திற்குரியவர்கள் என்ற தெரிவு பல இன்னல்களிற்கு மத்தியிலும் தேசியத்திற்காக குரல் கொடுக்கும் யாழ். பல்கலைக்கழக கல்விச் சமூகத்தின் இளையோர்களை தனது தெரிவிற்கு உள்ளடக்க வேண்டியது அக் கட்சியின் தலையாய கடமையாகும்.
ஏனெனில் தமிழ் மக்களின் பிரதான குரல்களாக இருக்கும் ஒரு பெரும் அமைப்புகளில் இக்கட்சியும் யாழ் பல்கலைக்கழக சமூகமுமேயாகும்.
இந்த வகையில் சர்வதேசத்தினாலேயே உற்று நோக்கப்படும் வடமாகாண சபைத் தேர்தலில் தொடர்ந்தும் பழுத்த பழங்களுக்கே முன்னுரிமை அளிப்பதை விடுத்து மாறாத கொள்கையும் உறுதியான வெற்றிவாய்ப்பும் படைத்த பல்கலைக்கழகத்தின் இளம் சமூகத்திற்கு வேட்பாளர் பட்டியலில் இடமளிக்க வேண்டியது இக்கட்சியினருக்கு நாம் விடுக்கும் அவசர வேண்டுகோளாகும்.
இதை கருத்திலெடுக்காத பட்சத்தில் வடமாகாண சபை தேர்தலில் தமிழ் மக்கள் கொண்டுள்ள அக்கறை தொடர்பில் மக்களும் யாழ்.பல்கலைக்கழ்க சமூகமும் மீள்பரிசீலனை செய்யவேண்டிய ஒரு துர்பாக்கிய நிலை உருவாகும் என்பதை தெரிவித்துக் கொள்கின்றோம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது
0 கருத்துகள்:
கருத்துரையிடுக