வடக்குத் தேர்தலை ஜனநாயக முறையில் நடத்துவதாக அரசு கூறிக் கொண்டாலும், நிச்சயமாக வடக்குத் தேர்தலின் போது அரசு ஏதாவது குளறுபடிகளைச் செய்தே தீரும் என ஐக்கிய சோஷலிஸக் கட்சியின் தலைவர் சிறிதுங்க ஜயசூரிய நேற்றுத்தெரிவித்தார்.
அதிகாரத்தைப் பகிர்ந்து நாட்டை ஐக்கியப்படுத்துவோம் அமைப்பின் வாராந்த ஊடகவியலாளர் சந்திப்பு பொரளையில் நேற்று நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இதன்போது மேலும் அவர் தெரிவித்ததாவது:
"நாம் இதுவரை காலமும் செய்துவந்த போராட்டங்களுக்கு சீக்கிரமாக ஒரு தீர்வொன்று வடமாகாணசபைத் தேர்தல் மூலமாக வரப்போகிறது. இந்த வெற்றி அனைவருக்கும் கிடைக்கும் வெற்றியாகும். ஆனால், இந்த வெற்றியை அடைய இன்னும் நிறையத் தூரம் பயணிக்க வேண்டியுள்ளது.
வடக்கில் தேர்தல் சீரான முறையிலும், அமைதியான முறையிலும் நடைபெற வேண்டுமானால், அங்கிருக்கும் இராணுவத்தினரை உடனடியாக அகற்ற வேண்டும். தற்போது இந்தியாவும், கொடுத்த வாக்குறுதியைப் போலவே வடமாகாண சபைத் தேர்தலை நடத்துமாறு கூறிவிட்டது.
தற்போது அரசு தூக்கத்திலிருந்து விழித்து விட்டதைப்போல செயற்பட்டுக் கொண்டு வருகிறது என்றுதான் கூறவேண்டும். காரணம், 7 வருடங்களுக்கு முன் திருகோணமலையில் வைத்து மாணவர்கள் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் 12 சந்தேகநபர்களைப் பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.
இவையெல்லாம், எதிர்வரும் நவம்பர் மாதம் இலங்கையில் நடைபெறவுள்ள பொதுநல வாய மாநாட்டை ஒட்டி நடத்தப்படுகின்ற நாடகங்களாகும். இப்படிப்பட்ட அரசு வடமாகாண சபைத் தேர்தலை எந்த ஒரு பிரச்சினைகளும் ஏற்படாதவாறு, ஜனநாயக முறையில் நடத்தப்போவதாக சர்வதேசத்திடம் கூறிவருகிறது. ஆனால், நிச்சயமாக இத் தேர்தலில் அரசு வெற்றிபெறும் நோக்குடன் குளறுபடிகளைச் செய்தே தீரும் என்றார்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக