18

siruppiddy

ஜூலை 03, 2013

வேலூர் சிறையும் நளினியின் கைப்பேசியும்...

முன்னாள் பிரதமர் ராஜீவ் கொலை வழக்கில் தூக்கு தண்டனைக்கு ஆளாகி தற்போது ஆயுள் தண்டனை சிறைவாசியாக வேலூர் பெண்கள் சிறையிலிருக்கும் திருமதி நளினியிடமிருந்து 20-04-2010 அன்று கைப்பேசியைப் பறிமுதல் செய்ததாகவும், சட்ட விரோதமாக சிறையில் கைப்பேசி மற்றும் கத்தி வைத்திருந்ததோடு, சிறை அதிகாரிகளை பணிசெய்ய விடாமல் தடுத்ததாகவும் நளினி மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. வரும் 29-07-2013 அன்று நீதிமன்றத்தில் வழக்கு விசாரணைக்கு வரவுள்ளது.
 21 ஆண்டுகளுக்கும் மேலாக தூக்கு தண்டனைக் கைதிகளாகவும், ஆயுள் தண்டனைக் கைதிகளாகவும் வேலூர் சிறையிலிருக்கும் நளினி, முருகன், சாந்தன் மற்றும் பேரறிவாளன் உள்ளிட்ட எழுவர் மீதும் வெறுப்பும், கோபமும், கொஞ்சம் கொஞ்சமாகக் கரைந்து மக்களிடத்தில் அது அனுதாபமாக வளர்ந்துவரும் இந்தச் சூழலில் கைப்பேசி வைத்திருந்தார் கத்தி வைத்திருந்தார் என்றும் அதிகாரிகளின் கடமைகளுக்கு குறுக்கே தடுப்புச் சுவராக நளினி நின்றார் என்றும் சிறை நிர்வாகம் விடும் சரடுகளை நம்ப தமிழ்நாட்டில் எந்த இளிச்சவாயர்களும் தயாராக இல்லை. (காங்கிரஸ் நண்பர்களைத் தவிர)
 சிறையில் உள்ள ஒரு கைதிக்கு வெளியிலிருந்து கைப்பேசியை எடுத்துச் சென்று கொடுப்பதென்பது அவ்வளவு சுலபமா?
 தமிழ்நாட்டில் உள்ள 9 நடுவண் சிறைகளிலும் உள்ள நடைமுறை என்ன என்பதைத் தெரிந்து கொண்டால் உண்மை ஓரளவு புரியும்.
 விசாரணை அல்லது தண்டனைச் சிறைவாசிகளைப் பார்க்கச் செல்லும் போது மனுதாரர் கட்டாயம் தங்களது புகைப்படத்துடன் கூடிய ஏதாவது ஒரு அடையாளச் சான்றினை எடுத்துச் செல்ல வேண்டும். நேர்காணல் மனுவிலும், பதிவேடுகளிலும் அடையாளச் சான்றின் எண்கள் எழுதப்பட வேண்டும். இதன் பிறகு மனுதாரர் மின்னணுச் சோதனைக் கருவியின் மூலமாக (மெட்டல் டிடெக்டர்) தீவிர சோதனைக்கு உள்ளாக்கப்படுவார். சிறைக்காவலர்களும் தனியாக மனுதாரரின் அங்க அவயங்களை தொட்டுச் சோதிப்பார். மனுதாரரின் கைப்பேசி, ஆயுதங்கள் உள்ளிட்டப் பொருட்கள் ஏதேனும் இருந்தால் அவற்றை அங்கேயே பறிமுதல் செய்துவிடுவர்.
 இதன்பிறகு கைதிகளுக்கு எடுத்துச்செல்லும் தின்பண்டங்கள், பழங்கள் பழைய, புதிய உடைகள் முதலியவைகளும் தீவிர சோதனைகளுக்கு உள்ளாக்கப்படும் உதாரணமாக பிரெட் பாக்கெட், பிஸ்கட் முதலியவைகள் பிரித்துப் பார்க்கப்படும். இனிப்புப் பொருட்கள், எண்ணெய்ப் பலகாரங்கள் தடை செய்யப்பட்ட பொருட்கள் என்பதால் அதை அனுமதிக்க மாட்டார்கள். பீடி, சிகரெட் போன்ற பொருட்கள் தடைசெய்யப்பட்டிருந்தாலும், சிறை நிர்வாகத்தினராலேயே கைதிகளுக்கு வழங்கப்படுவதால் அவை மட்டும் அனுமதிக்கப்படும். பழங்களில் மாம்பழம் மட்டும் சிறைகளில் அனுமதிக்கப்படுவதில்லை.
 சமீபகாலமாக திராட்சை, சப்போட்டா போன்ற பழங்களை கடலூர், சேலம் போன்ற நடுவண் சிறைகளில் அனுமதிக்கப்படுவதில்லை. காரணம் கைதிகள் மேற்கண்ட பழங்களிலிருந்து சாராயம் தயாரித்து விடுகிறார்களாம். புதிய ஆயத்த ஆடைகள் எடுத்துச் சென்றால் அதில் இணைக்கப்பட்டிருக்கும் குண்டூசிகளை அப்புறப்படுத்திவிட்டு உடைகளை நன்கு களைந்து பரிசோதிப்பார்கள். இந்தப் பொருட்கள் அனைத்தும் ஒரு துணிப்பையில் போட்டு கட்டிவிடுவார்கள். அந்தப்பையில் அடையாள எண் எழுதப்பட்டிருக்கும். அதே எண் பொறித்த டோக்கனை மட்டும் மனுதாரரிடம் கொடுத்து நேர்காணல் காண அனுமதிப்பார்கள்.
 ஆக, பொருட்களை மனுதாரரே கைதிகளிடம் நேரடியாக கொடுப்பதற்கு பதிலாக, பொருட்கள் இருக்கும் பையின் எண்ணுக்குரிய டோக்கனை நேர்காணலுக்கான அதிகாரியின் மூலமாகவே மனுதாரர் கைதியிடம் கொடுக்க முடியும்.
 ஒவ்வொரு நடுவண் சிறையிலும் நேர்காணல் காணுகின்ற இடத்தில் மனுதாரருக்கும் கைதிகளின் சந்திப்புகளுக்குமான இடைவெளி 2 அல்லது 3 அடி அகலம் இருக்கும். இந்த இடைவெளியின் இருபக்கமும் தடித்த இரும்பாலான கம்பி வளைகள் பிண்ணப்பட்டிருக்கும். சுண்டுவிரல் அளவுமட்டுமே இடைவெளிகள் கொண்ட கம்பி வளைகளில், கதவின் சாவித்துவாரத்தில் கண்களை வைத்துப் பார்ப்பதைப் போல கைதிகளின் முகம்பார்த்துப் பேசவேண்டும். இருவருக்குமான இடைவெளியில் சிறைவார்டன் தடியுடன் அவ்வப்போது நடந்துகொண்டே இருப்பார்.
 கைதிகளின் பாதுகாப்புக் கருதியும், சட்ட விரோதமாக கைதிகளுக்கு எந்தவித உதவியும் கிடைத்துவிடக்கூடாது என்பதற்காகவே மேற்கண்ட இடைவெளியும், இரும்புகம்பிப் பாதுகாப்பும். அதுமட்டுமல்லாமல் எந்தநேரமும் கண்காணித்துக் கொண்டே இருக்கும் கண்காணிப்புக் கேமராவின் முன்புதான் நேர்காணல் நடக்கும். நாம் எடுத்துச்செல்லும் டோக்கனை சிறை வார்டனிடம் கொடுக்கவேண்டும். அவரிடமிருந்து கைதி டோக்கனை பெற்றுக்கொள்வார். சிறைவார்டன் இருக்குமிடத்தில் மட்டும் ஒரு கை நுழைவுமளவிற்கு சிறிது வழி (கவுன்ட்டர்) இருக்கும்.
 மின்னணு பரிசோதனை, சிறை அதிகாரிகளின் பரிசோதனை, பொருட்கள் தீவிர பரிசோதனை, கண்காணிப்புக் கேமரா, இரும்பு வளைகள், இடைவெளிகள் இத்தனையும் தாண்டித்தான் நளினிக்கு கைப்பேசியும், கத்தியும் சென்றதாக வழக்கென்றால் ஒன்று, வழக்கு பழிவாங்கும் நோக்கத்தோடு புணையப்பட்டிருக்க வேண்டும். அல்லது சிறை அதிகாரிகளின் துணையுடன் நளினிக்கு கத்தியும் கைப்பேசியும் கிடைத்திருக்க வேண்டும்.
 இதில் எது உண்மை என்பதை சுதந்திரமான விசாரணையும், நளினிக்கு வழங்கப்படும் பேச்சுரிமையுமே இதைத் தீர்மானிக்க முடியும். ஆனால் எல்லா கண்காணிப்புகளையும் தாண்டி சிறையில் இருக்கும் ஒரு கைதிக்கு கைப்பேசியும், சிம்கார்டும் கிடைத்துவிட்டாலும், மின்னேற்றி (சார்ஜர்) வேண்டுமல்லவா? கைதிகளின் அறையில் மின்விளக்குபோட மட்டுமே சுவிட் உள்ளது. சமீபத்தில்தான் பல சிறைகளுக்கும் மின்விசிறி அனுமதிக்கப்பட்டுள்ளன. இதில் எந்த கைதிகளின் அறையிலும் பிளக் பாயிண்ட் கிடையாது. அப்படியானால் ஒரு கைதி அல்லது நளினி போன்றவர்கள் தங்களது கைப்பேசிக்கு எங்கிருந்து மின்சாரம் பெற்றார்கள்? (சூரிய வெளிச்சத்தில் என்று சொன்னாலும் சொல்வார்கள்)
 எல்லாவித கண்காணிப்பையும் மீறி கைதிகளிடம், கைப்பேசி புழக்கத்தில் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டதால் புழல் சிறையில் கைப்பேசிகளுக்கிடையேயான உரையாடலைத் தடுக்க “ஜாமர்” என்ற கருவியைப் பொருத்தியுள்ளார்கள். இது அனைத்து நடுவண் சிறைகளுக்கும் விரிவுப்படுத்தப்பட்டிருந்தால் நளினி மீது வழக்கு பதிவு செய்திருக்க முடியாது (இருக்கவே இருக்கிறது கஞ்சா வழக்கு).
 உண்மையில் சிறையில் இருக்கும் கைதிகளுக்கு உயர் அதிகாரிகளின் துணையோடுதான் கைப்பேசி உள்ளிட்ட தகவல் தொடர்புச்சாதனங்கள் சென்றடைகின்றன. அதற்கு இரண்டு காரணங்கள் உள்ளன. 1. கைதி ‘பசையுள்ள’ நபராக இருந்தால் கைப்பேசி அனுமதிப்பதன் மூலம் அந்த நபரிடமிருந்து ‘நிறைய கறக்கலாம்’. 2. கைதி அரசியல் செல்வாக்கு பெற்றிருப்பவராக இருந்தால் நமக்கேன் வம்பு என்று சிறைநிர்வாகம் கண்டுகொள்ளாமல் இருந்து விடும்.
 இதற்கப்பாலும் வேறு வழிகளில் சட்டவிரோதமாக கைப்பேசி உள்ளிட்ட பல பொருட்கள் சென்றடைகின்றன. அதுவும் சிறை அதிகாரிகளின் துணையோடுதான். தமிழ்த் தீவிரவாதிகள், நக்சலைட்டுகள், இஸ்லாமிய கைதிகள், தாதாக்கள் என்று சொல்லப்படுபவர்களின் ஒரு சிலருக்கு சிறை அதிகாரிகளின் ஆசியுடன் கைப்பேசி உள்ளிட்ட சாதனங்கள் கிடைக்கின்றன. இதன் பின்னணியில் உளவுத்துறையினர் உள்ளனர். சிறையில் இருப்பவர்களின் நடவடிக்கைகள், அவர்களின் எதிர்காலத் திட்டம் ஆகியவைகளை கண்காணிப்பதற்கு உளவுத் துறையினர் பயன்படுத்தும் தந்திர உத்தியாகும் இது. இந்த உத்திகளையெல்லாம் மேற்கண்ட கைதிகளில் பலரும் அறியாதவர்களும் அல்ல.
அதிகார வர்க்கத்திடம் நாம் கேட்பது ஒன்றே ஒன்றுதான். வாதத்திற்காக நளினி சிறைக்குள் கைப்பேசி வைத்திருந்தது உண்மையென வைத்துக்கொண்டாலும், நளினியிடம் கைப்பேசியை அனுமதித்த சிறை அதிகாரிகளும் குற்றவாளிகளே. நளினியின் திட்டத்தை அறிந்து கொள்வதற்காக 21 ஆண்டுகள் கழித்து உளவு பார்க்க கைப்பேசியை கொடுத்தனுப்பும் அளவிற்கு உளவுத்துறையினர் ஒன்றும் மாங்கா மடையர்கள் அல்ல; நளினியும் அரசின் சூழ்ச்சியை அறியாத குழந்தையல்ல.
 ராஜீவ் கொலையில் மறைக்கப்பட்ட பல உண்மைகளைப்போல நளினியின் மீது பதியப்பட்ட இந்த வழக்குகளில் உண்மைகள் பல மறைக்கப்பட்டுள்ளன. அதனால்தான் சட்டத்தின் துணையுடன் நளினி குற்றவாளியாக்கப்பட்டுள்ளார். உண்மை வெளிவர நளினியின் கருத்துச் சுதந்திரத்தை நீதிமன்றம் மதிக்க வேண்டும். அதோடு நளினியின் வாதத்தில் இருக்கும் உண்மையை ஊடகங்களும் வெளிப்படுத்த வேண்டும்

 

0 கருத்துகள்:

கருத்துரையிடுக